எல்லாப்புகழும் இறைவனுக்கே! இஸ்லாம் காட்டும் இறையச்சம்
Islamic Quotes In Tamil
Islamic Quotes In Tamil-எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே !! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் நிறைவேற அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம்
மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது! என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.
இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.
நபிகள் நாயகம் மொழிந்தவை:
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
அமானிதத்தை (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மையாகும்.
உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
உனது தந்தையின் அன்பை நீ பாதுக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
பெருமை பேசுபவன் சுவனத்தில் நுழைய மாட்டான். கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
தன் நாவையும், வெட்கத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
வணக்க வழிபாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிபாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.
இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது. மேலும், உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன்பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே, வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவனை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.
எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. நாம் எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
சத்தியத்தை மீறக்கூடாது
சத்தியம் செய்வது எளிது. ஆனால், அதைக் கடைபிடிப்பது கடுமையானது. ஒருமுறை சத்தியம் செய்த பின், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலும் அதை மீறக்கூடாது.
குர்ஆன் இது பற்றி கூறுவதாவது.
உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் இறைவனை உங்களுக்கு சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, இறைவன் நன்கு அறிகின்றான். சத்தியத்தை முறிப்பதன் மூலம் உங்கள் நிலை, "தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டாக்கி விட்டாளே' அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது. உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள்,''.
இந்த வசனத்தை மனதில் கொண்டு, சத்தியம் செய்யும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.
இயற்கையை மாசுபடுத்தாதீர்
""இறைவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் வானத்திலிருந்து மழை பொழியச் செய்தான். பிறகு அதன் மூலம் உங்களுக்கு விதவிதமான விளைபொருட்களை உற்பத்தி செய்தான். இன்னும் கப்பலை- அவனே உங்களுக்கு வசப்படுத்தி தந்தான். அது அவனது கட்டளைக்கேற்ப கடலில் செல்கிறது. மேலும் உங்களுக்கு ஆறுகளையும் வசப்படுத்தித் தந்தான். மேலும் சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும் இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான்.
நீங்கள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அவனே உங்களுக்கு வழங்கினான். இறைவனின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றால் உங்களை வரையறுக்கவே முடியாது. ஆனால், மனிதன் பெரும் அநீதியாளனாகவும் நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்'' என்கிறது குர்ஆன்.
ஆம்... இறைவன் தந்த இயற்கையை மனிதன் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறான். அவன் தந்த வானக்கூரைக்கு கீழே "பங்களா' என்ற பெயரில் அவனது உலகை விட பெரிய மாளிகை கட்டியிருப்பதாக நினைத்துக்கொண்டு, இறைவனின் பரந்த உலகை ஏளனம் செய்கிறான். இதற்கெல்லாம் தண்டனை உண்டு என்பதை மறந்து விடுகிறான். துன்பத்தை தானாகவே வரவழைத்துக் கொண்டு இறைவனின் மீது பழிபோடுகிறான்.
இந்த வசனத்தை படித்த பிறகாவது இயற்கையை மாசுபடுத்துவோர் திருந்தினால் சரி...!
குர்ஆனின் வாழ்க்கை நெறி
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170
"நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' அல்குர்ஆன் 2:186
ஓர் உணவை உண்டு ,அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய, மற்றும் ஓர் பானத்தைப் பருகி அதற்காக அல்லாஹ்வைப் புகழக் கூடிய அடியாரை நிச்சயமாக பொருந்திக் கொள்கிறான் .
மூன்று விஷயங்கள் யாரிடம் இடம் பெறுகின்றனவோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார் .1,மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.2, அவர் எம்மனிதரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பார் .3, இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை நீக்கி ஈடேற்றம் அடையச் செய்த பின் மீண்டும் அந்த நிராகரிப்பின் பக்கம் திரும்புவதை , தம்மை நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பார் .
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது 'நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்' என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, 'இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை.
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது 'நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu