ஜாதகக் கட்டம், அதற்குரிய அர்த்தம் தெரியுமா? வாங்க பாக்கலாம்
![Birth Chart Palangal in Tamil Birth Chart Palangal in Tamil](https://www.nativenews.in/h-upload/2023/04/17/1700227-rasi-kattam.webp)
Birth Chart Palangal in Tamil
Birth Chart Palangal in Tamil-ஒரு நபரின் ஜாதகம் என்பது அந்த நபரின் தனித்துவமான கர்ம வரைபடமாகும். இதன் மூலம் அந்த நபரின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றி அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தை ஆராய்ந்து முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் இயலும். ஒரு குறிப்பிட்ட ஜாதகம் அந்த குறிப்பிட்ட நபரின் உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நிலைகளைப் பற்றி அவர் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாக செயல்படுகின்றது.
ஒரு ஜாதகத்தின் / ராசிக்கட்டத்தின் அமைப்பு எவ்வாறு இருக்கும்?
இராசி என்பது வான் மண்டலத்தில் 360 பாகை கொண்ட ஒரு நீள்வட்ட வடிவ அமைப்பு ஆகும். இந்த 360 பாகை 12 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. வட்ட வடிவில் அமைப்பதை விட கட்டமாக அமைப்பதால் எளிதில் புரியும் என்று 12 கட்டங்களை அமைத்து ஜாதகக் கட்டம் அமைக்கப்படுகின்றது. இதனையே நாம் ராசிக் கட்டம் என்று கூறுகிறோம்.
இந்த பன்னிரண்டு கட்டங்களும் விலங்கு மற்றும் இன்ன பிற உருவ அமைப்பில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு கட்டங்களும் நிலையாக இருக்கின்றன. இந்தக் கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றி வரும் வேகத்திற்கேற்ப, மாத கிரகங்கள், வருட கிரகங்கள் என்று கூறப்படுகின்றன.
இந்த வீடுகள் ஒன்று முதல் பன்னிரண்டு எண்களில் குறிப்பிடப்படுகின்றன. முதலாம் வீடு லக்னம் என்று அழைக்கப்படுகின்றது. கடிகாரச் சுற்று முறையில் இந்த எண்கள் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் அல்லது கிரகங்கள் இருக்கும் தீர்க்காம்சத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவற்றிற்குரிய கட்டங்களில் நிரப்பப்படு கின்றன.
பிறப்பு ஜாதகம் மூலம் ஒருவர் பிறந்த நேரத்தில், ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலைகளை அறிய இயலும். ஜாதகம் என பிரபலமாக அறியப்படும் இது, ஒரு நபரின் பிறந்த இடம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரகங்களின் நிலைகளை குறிக்கின்றது. உங்கள் ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைக் குறிக்கின்றது. அந்த அமைப்பிற்கேற்ப நமது வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கின்றது.
ஒரு ஜாதகத்தை எப்படி படித்துப் பார்ப்பது ?
ஒருவரின் ஜாதகத்தினை சரியாக ஆராய்ந்து கணிப்பதன் மூலம் அந்த நபரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை நாம் அறிந்து கொள்ள இயலும். ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து கணிப்பது என்பது விரிவான செயல் முறை ஆகும். இங்கு நாம் ஓரு ஜாதகத்தை எவ்வாறு வரிசைக் கிரமப்படுத்தி படிப்பது அல்லது பார்ப்பது என்பதை சற்று சுருக்கமாகக் காண்போம்.
உங்கள் ஜாதகத்தில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைக்கபடும். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும். இந்த சின்னம் மற்றும் வீடுகளின் பெயர்கள் மாறாத , நிலையான ஒன்றாகும்.
கடிகாரச் சுற்று முறையில் எண்ணி, தீர்காம்சத்திற்கேற்ப சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுள் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வீட்டில் உள்ளன என்று அறிந்து அமைக்க வேண்டும்.
இறுதியாக ஒன்பது கிரகங்களும் எந்தெந்த வீட்டில் உள்ளன என்பதை அறிய வேண்டும்.
இவை ஒரு ஜாதகத்தின் அடிப்படை விஷயங்கள் ஆகும். இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து உங்கள் ஜோதிட அறிவை பயன்படுத்தி நுணுக்கங்களை ஆராய்ந்து வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குரிய பலன்களை கணித்து அளிக்க வேண்டும்.
ஜோதிடத்தின் மிக அடிப்படையாகப் பார்க்கப்படுவது 12 ராசிகள். அந்த ராசிக்கான அமைப்பு ஜாதக கட்டமாக உள்ளது. ஒவ்வொருவரின் ஜாதகத்தில், அவர் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைப்பைப் பொருத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும்.
அதன் அடிப்படையில் அவருக்கான ராசி மற்றும் அதில் இருக்கும் நட்சத்திரம் என்ன என்பது அப்போது ஜோதிடர்கள் குறிப்பெழுதி ஜாதகமாக கொடுப்பார்கள்.
உங்கள் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களுக்கான என்ன வகையான அடிப்படை பலன்கள் ஒரு கிரகம் கொடுக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
![](https://www.instanews.city/h-upload/2023/04/17/1700224-jadagam.webp)
ஜாதகத்தில் உள்ள முதல் வீடு (கட்டம்)
லக்கின பாவம் என கூறுவர். இது அந்த ஜாதகத்தினரின் உடல் வாகு, அழகு, நிறம், ரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலை அமைப்பு, வாழ்க்கை அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகளை குறிக்கும்.
இரண்டாம் பாவம்
வீடு, வாக்கு ஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. ஒரு ஜாதகத்தினரின் குடும்பம், தனம், கல்வி, வாக்கு, நேத்திரம், பேச்சுத் திறன், கலை திறன், அவரின் ஆர்வம், நடை உடை பாவனை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, முகம், நாக்கு, உணவு ஆகியவற்றை குறிப்பதாகும்.
மூன்றாம் பாவம்
எதிரியை எதிர்கொள்ளும் திறன், வெற்றி கொள்ளும் திறமை, இசையை ரசித்தல், இசையில் ஆர்வம், தொழில் அமையக்கூடிய நிலை, வீரியம், அவரின் ஆண்மை திறன் அதாவது தைரியம், துணிவு, பயமின்றி செயலாற்றும் மனப்பாங்கு உள்ளிட்டவை அடங்கும்.
நான்காம் பாவம்
மாதுர் ஸ்தானம் (தாய்) என குறிப்பிடப்படுகின்றது. உயர் கல்வி, வாகனம் வாங்குதல், வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தல், வசிக்கும் வீடு, தொழில், தாயின் உறவு, அவரின் நலம், உறவுகளின் நிலை, அதனால் ஏற்படும் பலன்களை அடக்கியதாகும்.
ஐந்தாம் பாவம்
புத்திர ஸ்தானம் / பூர்வ புண்ணிய ஸ்தானம் என குறிப்பிடப்படும் பாவம் இது. தாய் வழி உறவு, மாமன்மார்களின் உறவு, செல்வம், பூர்வ புண்ணியங்கள் அதாவது சென்ற பிறவியில் செய்த நன்மை, தீமைகளை அடிப்படையாக கொண்ட பலன்கள், மொழியில் தேர்ச்சி, மந்திரங்கள், வேதங்கள் அறியும் திறமை, உயர் கல்வி பெறுதல், அறிவுத்திறன், அனுபவ அறிவு, பேச்சாற்றல், சொற்பொழிவு செய்தல், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை ஆகியவை குறிப்பதாகும்.
ஆறாம் பாவம்
ரோக / நோய் ஸ்தானம் என குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு ஜாதககாரர் எந்த நோயினால் பாதிக்கப்படுவார், பகைவரால் ஏற்படக் கூடிய துன்பம், ஆயுதங்களால் ஏற்படக் கூடிய ஆபத்து, வலி, காயம் சண்டை, யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், பொருட்கள் களவு போகுதல், தண்ணீர், நெருப்பால் ஆபத்து, ஏதேனும் விலங்குகளால் ஆபத்து உண்டாகுதல் போன்றவை அடங்கும்.
ஏழாம் பாவம்
மாரக ஸ்தானம் / களத்திர ஸ்தானம் என கூறப்படுகிறது. திருமணத்தை குறிக்கும் இந்த பாவம், ஆண்களுக்கு அமையும் மனைவியை குறித்தும், பெண்களுக்கு அமையும் கணவரைக் குறித்தும் அறிவிக்கும் பாவம். அதோடு ஒருவருக்கு திருமணம் நடக்கும் காலம், கணவன் / மனைவியின் ஆயுள். திருமண சுகம், சிற்றின்பத்தைக் குறிப்பதாகும்.
எட்டாம் பாவம்
இது ஒருவரின் ஆயுளை கூறும் பாவம். யுத்தம், சண்டையில் ஆயுதங்களால் காயம் உண்டாகுதல், விபத்து, தீராத வியாதியால் பாதிக்கப்படுதல், இடையூறு ஏற்படுதல், மனசஞ்சலம், நீங்காத பகை உண்டாகுதல், கருத்து மோதல், அதிக வீண் செலவுகள் மரணத்தை அறிவிக்கும் பாவம்.
ஒன்பதாம் பாவம்
பாக்கிய ஸ்தானம் / பிதுர் ஸ்தானம் (தந்தை) எனப்படும். முன் பிறவியில் செய்த பாவம், பாவாதிபதி பாவம் விதிப்படி 5ஆம் பாவத்திற்கு 5ஆம் பாவமே 9 ஆம் பாவம். இதன் குணங்களாக தான, தர்மம் செய்தல், நன்கொடை கொடுத்தல், ஆன்மிக உணர்வு உண்டாகுதல், கோயிலை புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்தல் போன்ற திருப்பணிகள் செய்யும் யோகம்.
பத்தாம் பாவம்
உத்தியோக ஸ்தானம் / ஜீவன ஸ்தானம் என்பர். தொழில், வியாபாரம், உத்தியோக, கர்ம வினை செய்து முடித்தல் என ஜீவனத்தை நடத்தக் கூடிய அனைத்துவித வேலையையும் குறிக்கும்.
பதினோராம் பாவம்
லாபஸ்தானம் எனும் இந்த பாவம் மூத்த உடன் பிறப்புகளைப் பற்றியும், சேவை செய்தல், இரண்டாம் திருமணம் (இளைய மனைவி) குறிக்கும்.
பன்னிரண்டாம் பாவம்
விரய ஸ்தானம் என்று பெயர். இது ஒருவருக்கு அமையும் தொழில், வியாபாரம், உத்தியோகம் செலவுகள், மறுமையில் கிடைக்கக் கூடிய பேறு. மறுபிறவி அதாவது மரணத்திற்கு பிந்தைய நிலையை குறிப்பதாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu