திருவாரூர் அருகே பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து சென்ற இந்து பெண்கள்
பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து சென்ற இந்து பெண்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலின் திறப்பு விழாவுக்கு இந்துக்கள் சீர்வரிசை கொண்டு சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலில் தென் மாநிலங்கள் எப்போதும் தனித்து நிற்பதுண்டு. இந்த தனித்துவம் தான் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியலுக்கே சில நேரம் வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. மதச்சார்பின்மையும், மத நல்லிணக்கமும்தான் இந்த தனித்த அரசியலின் அடையாளம். வட இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடும், கேரளாவும் அந்த நாளை மிகச்சாதாரணமாக கடந்து சென்றன.
காரணம் அரசியலில் மதம் கலக்க கூடாது என்பதில் இம்மாநில மக்கள் தெளிவோடு இருக்கிறார்கள். அதே நேரம் மத நல்லிணக்கத்தில் உறுதியோடும் இருக்கிறார்கள். இதற்கு மற்றொரு உதாரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. திருவாரூர் கடியாச்சேரியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் வெற்றிலைபாக்கு, பூக்கள், பழங்கள், இனிப்பு அடங்கிய சீர்வரிசையை கொண்டு வந்து விழாவை சிறப்பித்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழ் செல்வி, ராஜா மற்றும் தமிழ்ச்செல்வி, ஊராட்சிமன்ற தலைவர் மேனகா கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா ஐயப்பன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் மன்மதன் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் தலைவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். விழாவில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நாங்கள் காலங்காலமாக இங்கு ஒன்றாக வசித்து வருகிறோம். கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய சகோதரர்கள் மோர், நீர் வழங்கி உதவி வருகின்றனர். அந்த வகையில் நாங்களும் அவர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கிறோம். நாங்கள் வேற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மத நல்லிணக்கம்தான் எங்களுக்கு முக்கியமானது" என்று கூறியுள்ளனர். இந்த விழா திருவாரூர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu