குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
X
குருபகவான், உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும்.

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

பொது பலன்கள்

குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ரிஷபம் குருவின் பகைவீடு. அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7,9-ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.

இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் இவை தோன்றினாலும் சரியான நடவடிக்கைகளால் அனைத்தும் சீராகும். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.

புதிய கண்டுபிடிப்புகளால் வான் வெளியில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்படும். கொடுமையான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை, தெய்வீக நாட்டம், வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்களின் உண்மையை அறிதல் போன்றவற்றால் அமைதி நிலவும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும்.


மேஷம் பொது பலன்கள்

கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள். பரந்த மனப்பான்மை உடையவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் ராசி ஸ்தானத்தில் இருந்து தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 6,8,10-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் எதிரிகள் பயம் நீங்கும். ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வீடு, வாகன யோகம் உண்டாகும்.

வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவீர்கள். அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த சமயத்திலும் வாக்குறுதிகளை யோசித்துச் சொல்லுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறூங்கள். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு.சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். பயணம் செல்லும்போது வேகத்தைத் தவிருங்கள். அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடும், பெருமாள் ஆராதனையும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

நட்சத்திர பலன்கள்

அஸ்வினி:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

பரணி:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!