முருகப்பெருமானின் அருளை பெற..சஷ்டி விரதத்தை கடைபிடியுங்கள்.

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.
'சஷ்டியிலிருந்தால் அகப்பையில்" வரும் என்று கூறுவார்கள். இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப்பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட, அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் 'அகப்பையாகிய" 'கருப்பையில்" குழந்தை உருவாகும் என்று கூறப்பட்டது. இப்பழமொழியே காலவெள்ளத்தில் 'சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என்று மறுவிவிட்டது. இன்று வெள்ளிக்கிழமை (22.04.2022) தேய்பிறை சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.
தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபம் ஏற்ற வேண்டும். கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியமாக செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதமும் சேர்த்து அனுஷ்டித்தால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் தீரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூடிய விரையில் குழந்தை பேறு உண்டாகும்.திருமணத்தடை அகலும். பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu