Tirupati temple- திருப்பதி ஏழுமலையான் கருட சேவைக்கு, வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கை

Tirupati temple- திருப்பதி ஏழுமலையான் கருட சேவைக்கு, வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கை
X

Tirupati temple- ஏழுமலையான் கோவிலில், கருட சேவை. (கோப்பு படம்)

Tirupati temple- ஏழுமலையான் கருட சேவைக்கு, சென்னையில் இருந்து வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

Tirupati temple, Garuda service,white silk cloths- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு சென்னையில் இருந்து வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி புறப்படுகிறது.

இது குறித்து இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவையின் போது, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, தமிழக பக்தர்கள் சார்பில், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்கிறது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள், வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகம்.


அந்த அடிப்படையில், திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருடசேவையின்போது திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்னையில் தொடங்கி திருமலை செல்லும் திருக்குடை ஊர்வலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டு தரிசிப்பார்கள். திருக்குடைகளை ஏழுமலையானாக நினைத்து பிரார்த்தனை செய்வார்கள். தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டு இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக் குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.

சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில், வரும் 16-ம் தேதி காலை 10.31 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடைகள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மவுனகுரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் கோவில் சச்சிதானந்தா சாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, அன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக் கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. தொடர்ந்து சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். பின்னர், அங்கிருந்து திருமலையை சென்றடையும்.

வரும் 21-ம் தேதி திருக்குடைகள் திருமலையை அடைந்ததும், ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.

அதேபோல, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தனிநபர் வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வந்து தனிப்பட்ட பூஜையை ஏற்றுக்கொள்ளாது. திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடர்பாக எவரிடமும் எவ்வித கட்டணமும் தரவேண்டாம். நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது. உண்டியல் வசூல் கிடையாது.

இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!