கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட சித்தர்கள் கூறும் ரகசியம் தெரியுமா?

பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.
விளக்கு ஏற்றும் முறைகள் குறித்தும் கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடும் பரிகாரங்கள் குறித்தும் சித்தர்கள் கூறியுள்ள விவரங்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கம் இதோ:
நம் வீட்டில், எப்போது வேண்டுமானாலும் விளக்கேற்றலாம். காலையும் மாலையும் எப்போது வேண்டுமானாலும் விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையிலும் வீட்டு வாசலிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது நல்ல நல்ல பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். அதேபோல், பண்டிகை முதலான காலங்கள், அமாவாசை, பெளர்ணமி முதலான முக்கிய தினங்கள் முதலான நாட்களிலும் வாஸ்து பகவானுக்கு உரிய நாளிலும் விளக்கேற்றுவது மிகுந்த பலன்களைத் தரும்.
கார்த்திகை மாதத்தில், முப்பது நாட்களும் விளக்கேற்றி வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.
கிழக்கு - இந்திரன் - சூரியன் என்பார்கள். மேற்கு - வருணன் - சனி பகவான் என்பார்கள். அதேபோல் வடக்குத் திசையானது - குபேரன் - புதன் பகவான் முதலானோரையும் தெற்குத் திசை- எமன் - செவ்வாய் பகவான் முதலானோரையும் குறிக்கும் என்பார்கள்.
கிழக்குப் பகுதியை குறிப்பவன் இந்திரன். அதனை ஆளும் கிரகம் சூரியன். ஆளும் திறனும், நல்ல தாம்பத்யமும் தந்தருள்வார்கள். அதேபோல குலம் விருத்தி அடையும். கீர்த்திடன் திகழலாம். ஆகவே, வீட்டில் உள்ள கிழக்கு திசையை ஒளிமிக்கதாக மாற்ற வேண்டும். எனவே, கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் வம்சம் வாழையடி வாழையென செழிக்கும்.
வடக்குப் பகுதியைக் குறிப்பவன் குபேரன். அதனை ஆளும் கிரகம் புதன் பகவான். ஆகவே வடக்குத் திசையை நோக்கி விளக்கேற்ற, வடக்கு திசை ஒளிபெறும். இதனால் நமக்கு சமயோஜித புத்தி கூடும். வாதத் திறமை அதிகரிக்கும். செல்வ வளத்துடன் வாழலாம். ஞானமும் யோகமும் பெறலாம். இல்லத்தின் தரித்திரம் காணாமல் போகும். மேற்குப் பகுதியைக் குறிப்பவன் வருணன். அதனை ஆளும் கிரகம் சனி பகவான்.
ஆகவே, மேற்குத் திசையை நோக்கி விளக்கேற்றினால், மேற்கு திசை ஒளி பெறும். அதனால் சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவோம். சுயதொழில் மேம்படும். விருத்தியாகும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
தெற்குப் பகுதியை குறிப்பவன் எமன். இதனை ஆளும் கிரகம் செவ்வாய் பகவான். பொதுவாக எமனுக்குரிய திசை அசுபமாதலால், தெற்கு நோக்கி விளக்கு வைத்தல் தவிர்ப்பது உத்தமம். திருக்கார்த்திகை என்றில்லாமல், எல்லா நாளும் வீட்டில் விளக்கேற்றுங்கள். குறிப்பிட்ட இந்தத் திசைகளில் ஏற்றினால், குலம் தழைக்கும். தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என சித்தர்கள் தெரிவித்துள்ளதாக சீனிவாச சித்தர் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu