அய்யர்மலை கோவில் படிகளில் ஏற சிரமமா? இனி கேபிள் காரில் செல்ல வசதி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.20.53 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
திமுக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல். திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மே 2021 முதல் இதுநாள் வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 1.921 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.6075 கோடி மதிப்பிலான 6.597.59 ஏக்கர் சொத்துகளும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும், புதிதாக 9 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமும் 17 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 774 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 92000 பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம். அய்யர்மலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும். ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் ரூ.9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை வசதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu