விடுமுறை நாளான இன்று பழனியில் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
விடுமுறைநாளான இன்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமான அளவில் வந்து குவிந்தனர். மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu