அய்யலூர் அருகே கோவில் விழாவில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கும் பக்தர்கள்
கோவில் பூசாரியிடம் அடி வாங்கும் பெண்.
தமிழகத்தில் ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மன் கோவில்களில் விழாக்கோலம் தான். ஆடிப்பெருக்கு விழா முடிவடைந்த நிலையில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி அம்மன் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் இடத்திற்கு இடம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். ஆனால் ஒவ்வொரு விழாக்களிலும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். மக்களின் நம்பிக்கை அடிப்படையில் இந்த விழாக்கள் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொல்லபட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் பழமையான மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் நின்றனர். அவர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். அதனைதொடர்ந்து கோவில் முன்பு அமரவைக்கப்பட்ட பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கப்பட்டது. பூசாரியிடம் அடி வாங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த விழா திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu