திருப்பதி: தரிசன டிக்கெட் கூடுதலாக விநியோகிக்க பக்தர்கள் கோரிக்கை

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் (பைல் படம்).
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியிட்டு வருகிறது.
அதேபோல் சிறப்பு நுழைவு தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அங்கப் பிரதட்சணம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.
இதனால் தினமும் 70 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.
நேற்று முன்தினம் 1.16 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட் வெளியிடப்பட்ட 90 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
அதே போல் தினமும் 150 பேர் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 60 நாட்களுக்கு 15,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தினமும் ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் தரிசன டிக்கெட் கூடுதலாக விநியோகிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 81, 170 பேர் தரிசனம் செய்தனர். 27,236 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu