சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. இதுவரை 13 லட்சம் பேர் சுவாமி தரிசனம்..
சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.
மேற்குதொடர்ச்சி மலையில், கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் இந்தக் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.
மேலும், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் நடை திறந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலங்களில் சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
இதற்கிடையே, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் உள்ளிட்டோர் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறையில் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், நாளுக்குநாள் மண்டல காலம் துவங்கியது முதலே பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 7695 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளனர்.
மேலும், இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் தற்போது வரை ஆறு மணி நேரம் காத்திருந்து அய்யப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் அய்யப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் காத்திருந்து அய்யப்ப சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
இதே போல வரும் டிசம்பர் 12 ஆம் தேதியும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளனர். நடப்பு ஆண்டில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த 23 நாட்களில் இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இருப்பினும் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu