பழனி முருகன் கோவிலில் கும்மி, ஒயிலாட்டம் ஆடிய கோவை பெண் பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் கும்மி, ஒயிலாட்டம் ஆடிய கோவை பெண் பக்தர்கள்
X

பழனியில் சீருடையில் குவிந்த கோவை பெண் பக்தர்கள்.

பழனி முருகன் கோவிலில் கோவை பெண் பக்தர்கள் கும்மி, ஒயிலாட்டம் ஆடி சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அகரித்துள்ளது. இதனால் கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். இதனால் பழனி நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர்.

பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வந்தனர். இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த அம்மன் கலைக்குழு சார்பில் கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 100-க்கும் மேற்பட்டோர் முருகப்பெருமானின் புகழ் பாடல்களுக்கு மேள இசைக்கு ஏற்ப கும்மி, ஒயிலாட்டம் ஆடினர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களின் செல்போனில் புகைப்படமும் எடுத்து அதனை மற்ற பக்தர்களுக்கும் தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!