கிறிஸ்துமஸ் ஆடம்பரத்தின் விழா அல்ல; மாண்புற வாழ்வதன் அடையாளம்

கிறிஸ்துமஸ் ஆடம்பரத்தின் விழா அல்ல; மாண்புற வாழ்வதன் அடையாளம்
X
இன்று, கிறிஸ்துமஸ் பெருவிழா. கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை. கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து பிறந்தநாளை, நினைவு கூறுவது தான், இந்நாள்.

''அன்பென்ற மழையில் அகிலங்கள் நனையவே, அதிரூபன் தோன்றினானோ; இரும்பான நெஞ்சிலும், ஈரங்கள் கசியவே, இறைபாலன் தோன்றினானே; போர்க்கொண்ட பூமியில் பூக்காடு காணவே, புகழ்மைந்தன் தோன்றினானே..'' என்ற பாடல் வரிகளின் ஆழம் தான், கிறிஸ்துமஸ் பண்டிகையின் உள்ளார்ந்த அர்த்தம்.

டிசம்பர் மாதம் வந்தாலே…உடல் சிலிர்க்க வைக்கும் 'குளுகுளு', பனிக்காலம் துவங்கிவிடும். அதே போன்று, கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் கிறிஸ்துமஸ் உற்சாகம் பிறந்து விடும். வீடுகளின் முகப்பில் நட்சத்திரங்களை தொங்க விடுவர்; கிறிஸ்துமஸ் பண்டியை வரவேற்கும் வகையில், மாட்டுத்தொழுவத்தில் பிறந்த ஏசுவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் குடில் அலங்காரம் அமைப்பர்.


தேவாலயங்கள் சார்பில், 'கிறிஸ்துமஸ் தாத்தா' வேடமணிந்தவர்கள், வீதி, வீதியாக சென்று குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவர்; கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் களைகட்டும். கிட்டதட்ட, டிசம்பர் மாதம் முழுக்கவே, கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

விழா சொல்வது என்ன?

'பகைவனையும் நேசி' என, பகைமை மறக்க சொல்லும் போதனையை தாங்கிய பைபிள் தான், கிறிஸ்தவர்களின் வேத புத்தகம். ஏசு கிறிஸ்துவின் போதனையில், அன்பு பரிமாற்றம் என்பதே, பிரதானமாக கூறப்படுகிறது. 'ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறரோடு பகிர்ந்து வாழ்வதே' கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதன் உண்மையான அர்த்தம் என்கிறது 'பைபிள்'.

"உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தை உங்களை மன்னிக்க மாட்டார்" எனக்கூறுகிறது பைபிள் (மத்.18:35). ஆக, வெறும் ஆடம்பரமும், கொண்டாட்டமும் மட்டுமல்ல கிறிஸ்துமஸ். அன்பு பரிமாற்றம், ஏழைகளுக்கு உதவி செய்தல், விட்டுக் கொடுத்து வாழ்தல் போன்ற பண்புகளை மனதில் பதிய வைப்பது தான், உண்மையான கிறிஸ்துமஸ்.


கிறிஸ்துமஸ் தாத்தா

இதற்கு உதாரணமாக, கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய கதையை சுருக்கமாக பார்ப்போம்:



கி.பி., நான்காம் நுாற்றாண்டில், செயின்ட் நிக்கோலஸ் என்ற பாதிரியார் வாழ்ந்தார். பெரும் பணக்காரராக விளங்கினார். மிகவும் நல்லவராகவும் இருந்தார். ஏழைகளுக்கு உதவி செய்தார்; அதுவும், யாருக்கும் தெரியாமல்…வறுமையில் வாடுவோரின் தேவையை அறிந்து, இரவில், மாறு வேடத்தில் சென்று, அவர்களது வீடுகளின் புகைப்போக்கி வழியாக பரிசுப் பொருட்களையும், பண முடிப்புகளைம் வீசி விட்டு செல்வார் என, கிறிஸ்தவ வரலாறு சார்ந்த குறிப்புகள் கூறுகின்றன. அவரது அந்த செயல் தான் 'சாண்டா கிளாஸ்' என்ற கதாபாத்திரமாக தோன்றி, சிறுவர், சிறுமியர்க்கு பரிசு பொருட்களை வழங்கும் பழக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.


மனித மாண்புகளை சொல்லும் கிறிஸ்துமஸ்

அதே போன்று, வீடுகளின் முகப்பில் தொங்கவிடப்படும் ஸ்டார்கள், ஏசுவின் பிறப்பை குறிக்கிறது. மாட்டு தொழுவத்தில் ஏசு பிறந்த போது, அவரை பார்க்க மன்னர்கள் மூவர் சென்றனர். அவர்களுக்கு, விண்ணில் தோன்றிய நட்சத்திரம், வழிகாட்டியதாக, பைபிள் கூறுகிறது. ஒருவருக்கொருவர் 'கேக்' பரிமாறிக் கொள்வதும் கூட, அன்பு பரிமாற்றத்தின் அடையாளம் தான். ஆக, பண்டிகை சார்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவத்தை ஆழமாக பறைசாற்றுகின்றன.


சுருங்க சொல்லப்போனால், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது வெறும் ஆடம்பரம் மட்டுமல்ல. அன்பு, இரக்கம், பரிவு, உதவும் குணம், மன்னிக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தாழ்ந்து போகும் குணம் என, மனித மாண்புகளை உரக்க சொல்லும் அடையாளம் என்பதே எதார்த்தம்.

கிறிஸ்தவ பெருமக்களுக்கு இன்ஸ்டாநியூஸ் இணையதளம் சார்பில், கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!