சித்திரை வியாழன் உங்களது தலையெழுத்து மாற பிரம்மதேவனை வழிபடுங்கள்.

இன்று ஏப்ரல் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி சித்திரை வியாழன்..! உங்களது தலையெழுத்து மாற பிரம்மதேவனை வழிபடுங்கள்..!!பிரம்மதேவன் வழிபாடு..!
உலக உயிர்களை படைக்கும் பிரம்மன், தனது பிரம்ம தண்டம் கொண்டு அனைவரின் தலையெழுத்தையும் எழுதுகிறார்.மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன்.பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது ஈசனின் தலைமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். இதனால் அவருக்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இருக்காது என்று ஈசன் சாபமிட்டார். சிவன் கோவிலில் சிவன் சன்னிதியின் சுற்றுப் பிரகாரத்தில் பிரம்மதேவன் வீற்றிருப்பதைக் காணலாம்.
பொதுவாக ஒருவருடைய தலையெழுத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது பிரம்மதேவன் தான். ஏனெனில் நம்மை படைக்கும்போதே நம் தலையில், நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எழுத்தினை எழுதுவது பிரம்மதேவன் தான்.
ஒருவருடைய ஜாதகமானது சரியில்லை என்றாலும் அவருடைய தலையெழுத்தை மாற்றுவதற்கு அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் திருப்பட்டூர் பிரம்மன் கோவிலில் உள்ள பிரம்மாவின் பாதத்தில் வைத்து, அந்த ஜாதகக்காரரின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து வந்தால், அந்த நபருடைய தலையெழுத்து சரியாகும் என்பது ஐதீகம்.
உங்கள் தலையெழுத்து எப்படிப்பட்டதாக இருந்தாலும் பிரம்மதேவனை நினைத்து சித்திரை மாத வியாழக்கிழமையில் மனதார வழிபட்டால் நிச்சயம் அந்த தலையெழுத்து மாறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
பிரம்மதேவனை வழிபடும் முறை:
பிரம்மாவை வீட்டில் இருந்தே வணங்கி வழிபடலாம்.காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் பிரம்மாவின் திருமேனி கொண்ட படத்தை வெள்ளை நிற தாமரையால் அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, உங்களால் முடிந்த நைவேத்தியத்தை (வெறும் கற்கண்டாக இருந்தாலும் சரி) படைத்து, நேராக இருக்கும்படி அமர்ந்து, பிரம்ம காயத்ரி மந்திரத்தை 11 முறை அல்லது 108 முறை அல்லது 1008 முறை சொல்லி பூஜிக்கலாம்.
'ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்"
இந்த பிரம்ம காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் பூர்வ ஜென்ம பாவங்களையெல்லாம் போக்கி, நம் வாழ்க்கையை திருத்தி அருள் செய்வார் பிரம்மா. வாழ்வை வளமாக்கும் இந்த மந்திரத்தை உச்சரித்து அனைவரும் பயன் பெறுவோம்...!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu