சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி
X
சித்ரா பௌர்ணமி அன்று காலை சித்திரகுப்தர் படத்திற்கு முன் பேனா காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம்.

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம்.

தமிழ் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பவுர்ணமியில் எமலோகத்தில் இருக்கும் சித்திரகுப்தர் பிறந்ததாக வரலாறு உண்டு! மனிதன் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை ஒன்று விடாமல் தன் கணக்கு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாம் இறந்த பிறகு நரகம் செல்ல வேண்டுமா? சுவர்க்கம் செல்ல வேண்டுமா? என்பதை தீர்மானிக்கிறார் சித்திரகுப்தர்! நாம் செய்யும் பாவங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கக் கூடிய அற்புதமான நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பவுர்ணமி. மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. அதில் சூரியன் வரும்பொழுது ஆண்டு தொடங்குவதாகப் பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார். அப்படிப்பட்ட தித்திக்கும் திருநாள் 2022 சுபகிருது ஆண்டின் சித்ரா பவுர்ணமி திதி அதிகாலை 2.25 மணிக்கு துவங்கி 12:25 க்கு முடிவடைகிறது. சூரிய அஸ்தமனம் 6:44 மணிக்கு முடிவடைந்து பவுர்ணமி முழுமையாக பூமியில் உதிக்கிறது. பௌர்ணமி திதி முடிவடைவதற்குள் சித்ரகுப்தருக்கு இவ்வாறு வழிபட வேண்டும்.

இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழி பிறக்கின்றது. விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலனை வழங்கும். இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும்.

கடல் அலை சீறிப்பாயும், அலைபாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள் தான் சித்ரா பவுர்ணமி ஆகும். நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, கொண்டாடும் விழாவாகவும் இந்தப் பவுர்ணமி அமைகின்றது.

நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக மாற்றவும் செய்யும்படி கும்பிட வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும். சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையில் தனிச்சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள் இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும்.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும்.

நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து 'சித்ரகுப்தன் படியளப்பு' என்று எழுதி வைப்பர். சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக்கொழுக் கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயறு மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும் வைக்க வேண்டும்.

ஒரு புதிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் பிள்ளையார் சுழி இட்டு 'சித்திரகுப்தர் படி அளக்க' என்று எழுதிக் கொள்ளுங்கள். மேலும் இந்நாளில் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.


சொல்ல வேண்டிய மந்திரங்கள்

சித்ரகுப்தா, சித்திர குப்தா

சேவித்தேன் நான் சித்திரகுப்தா!

நானே செய்த பாவமனைத்தும்

நல்லவனே நீ கடுகளவாக்கு!

நானே செய்த புண்ணியமனைத்தும்

நல்லவனே நீ மலையளவாக்கு!

வானும், நிலவும் உள்ளவரைக்கும்

வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!

உணவும், உடையும் உறைவிடம் அனைத்தும்

தினமும் வழங்கத் திருவருள் கூட்டு!

என்று பாடி ஒவ்வொருவரும் வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பதினாறு பவுர்ணமிகள் வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தை தொடங்க வேண்டிய நாள் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி அன்று தான். விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும். எந்தக்கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமியில் அன்னை பார்வதி தேவியை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், திருமணத்தடைகள் உள்ளவர்களுக்கு திருமண தடைகள் அகலும் என்கிற நம்பிக்கையும் உண்டு, எனவே சித்ரகுப்தரை மட்டுமல்லாமல் இந்நாளில் ஈசனையும், அம்பாளையும் வழிபடுவது சிறப்பு!

மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு சாப்பாட்டை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் என்கிற ஐதீகம் உண்டு.

Next Story
ai chatbots for business