திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலயத்தில் குழந்தைகளை ஏலம் விட்டு வழிபாடு
விழாவில் ஏலம் விடப்பட்ட ஒரு குழந்தை.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறத்தில் உள்ள முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் நாள் திருவிழாவாக மாபெரும் அன்னதானம் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்து இன்று அதிகாலை நிறைவடைந்தது.
செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததையடுத்து அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியினர் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் திருவிழாவின்போது அந்தக் குழந்தையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள். பின்னர் அந்த குழந்தை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் குழந்தையை ஏலம் எடுத்து அதற்கான தொகையை கோவிலில் செலுத்துவார்கள். பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய் தந்தையர் ஏலத்தொகையை கொடுத்து வாங்கி கொள்வார்கள். அது போல் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பலர் தங்கள் குழந்தையை ஏலத்தில் கொடுத்து அதனை பெற்றோர்களே வாங்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து விடிய விடிய நடந்த அன்னதானத்தில் முத்தழகுபட்டியில் உள்ள இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைவரும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து அன்னதானத்திற்கான காய்கறிகளை நறுக்குவது சமையல் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபட்டனர். சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது. அன்னதானத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கும் உணவை வாங்கிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu