இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
பைல் படம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற மிக முக்கியமான கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஆன நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் 48 மணி நேரம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நாட்களில் இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்களையும், டோக்கன்கள் வாங்காத பக்தர்களையும் கோயிலுக்குள் அனுப்பி கையாளுவதில் இரண்டு வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நிர்வாக ரீதியான சிரமங்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எதிர்கொள்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருப்பதியில் தினமும் வழங்கப்படும் SSD டோக்கன்களை வழங்குவதை TTD ரத்து செய்துள்ளது. எனவே, திருப்பதியில் அக்டோபர் 1, 7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் எஸ்எஸ்டி டோக்கன்கள் வழங்கப்படாது.
பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு TTDக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் இம்மாதத்தில் 7, 8, 14 ,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu