மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்த அயோத்தி ராமர்

காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை எல்இடி திரையில் பார்த்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்ணீர் சிந்திய காட்சி.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வைக் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் அகன்ற திரையில் ஆனந்த கண்ணீர் சிந்தி உள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உலகமே வியக்கும் வண்ணம் ர= ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடமாக இந்த இடம் கருதப்படும் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு இருப்பதற்கு நீண்ட சட்ட போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இருப்பதான் மூலம் பாரதிய ஜனதா அரசின் தேர்தல் கால வாக்குறுதியும் நிறைவேற்றி முடிக்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். இதற்காக பிரதமர் மோடி கடந்த 11 நாட்கள் விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அயோத்தியில் பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்விற்காக அயோத்தி முழுக்க கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சில மீட்டர் இடைவெளியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். கும்பாபிஷேக நாளில் பொதுமக்கள் அயோத்திக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அயோத்திக்குள் நுழைய அனுமதி தரப்பட்டது. மற்ற வாகனங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இருப்பினும், இந்த நிகழ்வை நாடு முழுக்க நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ராமர் கோவிலுக்கு எதிரான மனநிலையில் திமுக அரசு இருப்பதால் கோவில்களில் பூஜை நடத்துவதற்கு தடை விதித்து அறநிலைய துறை வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக பாரதிய ஜனதா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இதனை மறுத்தார்.மேலும் கோவில்களில் எல்இடி திரை மூலம் கும்பாபிஷேக நிகழ்வினை காணொலி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் ராமர் கோயில் நிகழ்வை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், அதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று போலீசார் நேற்று இந்த திரைகளை அகற்றினர்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நேரலை ஒளிபரப்பு மற்றும் பஜனை நிகழ்வுகளுக்கு போலீசார் அனுமதி தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் காமாட்சி அம்மன் கோவிலில் எல்இடி திரை பொருத்தப்பட்டு அயோத்தி நிகழ்வை நேரலையில் ஒளிபரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமக்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். அப்போது ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிர்மலா சீதாராமன், கண் கலங்கினார். அதன் பின்னர் கண்களில் நின்ற நீரைத் தனது புடவையால் துடைத்துக் கொண்டு அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வைப் பார்த்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அயோத்தி ராமர் கும்பாபிஷேக நிகழ்வை நேரலையில் பார்த்த மகிழ்ச்சியில் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தியதாக உடன் இருந்தவர்கள் கூறி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu