அட்சய திருதியை சிறப்புகள்

அட்சய திருதியை சிறப்புகள்
X
மே 14 வெள்ளிக்கிழமை அட்சய திருதியை நன்னாள்.! இன்று செய்யும் தர்ம காரியங்கள் தொடரும்.. உங்களை காக்கும்.. எனவே முடிந்தவரை பிறருக்கு உதவலாம்.

அட்சய திருதியை நாள் என்பது, சித்திரை மாத வளர்பிறையில் வருவதாகும். இந்த நாளில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக 'பவிஷ்ய புராணம்' தெரிவிக்கிறது. அந்த புராணம், அட்சய திருதியை எதற்காக முக்கியத்துவமும் பெருமையும் அடைகிறது என்பதாக குறிப்பிடும் நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

  • நான்கு யுகங்களில் ஒன்றான 'கிருத யுகம்', அட்சய திருதியை நாளில்தான் பிறந்தது.
  • பகீரதன் என்ற மன்னனின் கடுமையான தவம் காரணமாக, ஈசன் அருளால் ஆகாயத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வந்த கங்கை, அட்சய திருதியை நாளில்தான் முதன் முதலாக பூமியை வந்தடைந்தது.
  • பாண்டவர்கள் வனவாசம் அனுபவித்த காலத்தில், அவர்களுக்கு சூரியனிடம் இருந்து அட்சய பாத்திரம் கிடைத்தது. அது கிடைக்கப் பெற்றது, அட்சய திருதியை நாளில்தான்.
  • ஐஸ்வரிய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகியோர் அவதரித்ததும், குபேரன் தன்னிடம் உள்ள நிதிகளை ஈசனிடம் இருந்து பெற்றதும் இந்த நாளில்தான்.
  • ஒரு முறை பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்தார். இதையடுத்து ஏற்பட்ட தோஷத்தால், பிரம்மனின் மண்டை ஓடு, ஈசனின் கையில் ஒட்டிக்கொண்டு பிட்சை பாத்திரமாக மாறியது. யாரால் அந்த பாத்திரம் நிரம்புகிறதோ, அப்போதுதான் அது விடுபடும் என்ற சாபமும் ஈசனுக்கு உண்டானது. பல காலம் அந்த மண்டையோடுடன் பிட்சாடனராக திரிந்த ஈசனுக்கு, அன்னபூரணி அன்னமிட்டதும், அந்த மண்டை ஒடு பாத்திரம் கீழே விழுந்தது. அன்னபூரணி, ஈசனுக்கு பிட்சை இட்ட நாளும் அட்சய திருதியைதான்.
  • மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராம அவதாரம் நிகழ்ந்ததும், விநாயகருக்கு வியாச முனிவர் மகாபாரதத்தை சொல்லியதும் அட்சய திருதியை நாள்தான்.
  • வடமாநிலங்களில், அட்சய திருதியை நாள் அன்று திருமணம் நடத்துவதை பெரும் பேறாக கருதுகிறார்கள்.
  • மூன்றாவது திதியாக வருவது திருதியை. 3 என்ற எண்ணுக்கு அதிபதி குரு. இவர் உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிப்பவர். எனவே குருவுக்கு 'பொன்னன்' என்ற பெயரும் உண்டு. எனவேதான் அட்சய திருதியை நாளில், பொன் வாங்குவது சிறப்பு என்கிறார்கள்.
  • உடையாமல், முழுமையாக இருக்கும் அரிசிக்கு 'அட்சதை' என்று பெயர். அந்த அட்சதையைக் கொண்டு பெருமாளை வணங்குவதால், அந்த திதிக்கு 'அட்சய திருதியை' என்று பெயர்.
  • கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள முழைநர் பரசுநாதர் கோவிலில், அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
  • ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings