பழனி முருகன் கோவிலில், ரூ. 300 சிறப்பு கட்டணத்தில் ‘பிரேக்’ தரிசனம்; கருத்து சொல்ல பக்தர்களுக்கு அழைப்பு
பழனிமலை முருகன் கோவில் (கோப்பு படம்)
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கு படிப்பாதையை தவிர ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகள் உள்ளன. அதேபோல் கோவிலில் பொது தரிசனம் மட்டுமல்லாது விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகள் உள்ளன. இதன் வழியே முதியோர், குழந்தைகளுடன் வருவோர் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவில் பக்தர்கள் வரும் பிரதான கோவில்களில் "இடைநிறுத்த தரிசனம்" (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே அதிகளவில் பக்தர்கள் வந்துசெல்லும் முக்கிய கோவில்களில் ஒன்றான பழனிமலை முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கோவில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது;
பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" திட்டம் தொடங்கினால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்கள் என ஆண்டுக்கு மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது. இந்த தரிசன சேவைக்கு கட்டணமாக பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.
அவ்வாறு தரிசனம் செய்வோருக்கு கோவில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துகள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூன்) 16-ம் தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் உள்ள ஒரு ஆண்டில், மிக முக்கியமான 44 நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் மட்டுமே, இந்த இடைநிறுத்த தரிசன சேவை, பக்தர்களுக்கு வழங்கப்படும் என்பதால், முக்கிய விசேஷ நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதில், பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும், தாமதமும் ஏற்படாது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu