மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில்.. நீர் சுரக்கும் அதிசயம்..!!

மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில்.. நீர் சுரக்கும் அதிசயம்..!!
அருள்மிகு திரிம்பகேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பாக் என்னும் ஊரில் அருள்மிகு திரிம்பகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
நாசிக் மாவட்டத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் திரிம்பாக் அமைந்துள்ளது. திரிம்பாக்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.மூலஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.
மகாவிஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், பலராமர், ராமர், பாலாஜி, கங்காதேவி, விநாயகர், நந்தி, கோதாவரி அம்மன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது இந்த ஆலயம் அமைந்துள்ளது.இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது.
அம்மலையில் கௌதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன.பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்த தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.சிவபெருமானே இது புனித தலம் என, சிபாரிசு செய்த தலம் ஆகும். குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கிருந்து காவல் காத்து வருவது இத்தலத்தின் சிறப்பு. கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது.
ஆன்மிக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், ரிஷிகள் வாழ்ந்த தபோ வனங்களும் உள்ளன.ராமர், லட்சுமணனுடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடைய செய்துள்ளார். எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள்.
இத் திருக்கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
இத் திருக்கோயிலில் இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதும், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும் எனவும் நம்புகின்றனர். இங்குள்ள மூலவருக்கு மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu