மகத்துவம் நிறைந்த மகாமேரு.பத்ம பீடத்தில் அம்பாள்..

மகத்துவம் நிறைந்த மகாமேரு.பத்ம பீடத்தில் அம்பாள்..
X
திரிதள விமானத்துடன் கட்டப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில்...!!

தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் என்னும் ஊரில் அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.தேனியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அதாவது சுமார் 2 கி.மீ தொலைவில் அருள்மிகு காமாட்சி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

திருக்கோயில் கருவறையில் மூலவருக்கு முன்னே அமைந்துள்ள மகாமேரு மகத்துவம் வாய்ந்தது. அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. காஞ்சி காமாட்சி அம்பாளின் சக்தி பெற்ற குங்குமத்தைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்து, அதன்மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்தபடி அழகு ததும்பக் காமாட்சி அம்பாள் காட்சி தருகிறாள்.

அம்மனின் பிரசாதமாகத் தரும் குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு நவராத்திரி விழாவின் முதல் நாளில், ஒரு சிறுமியைப் போல அம்பிகைக்கு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அடுத்தடுத்து அம்பிகையின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் அலங்காரம் செய்து மிகச்சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.


இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக வைபவத்தின்போது, காஞ்சி காமாட்சி அம்பாள் உடுத்திக் கொண்ட புடவையைப் பூஜித்து, இந்தக் கோயிலின் அம்மனுக்குச் சாற்றி, சிறப்பு பூஜை செய்துள்ளனர். எனவே, காஞ்சி காமாட்சியே இங்கு உறைந்து அருள்பாலிக்கிறாள் என கூறுகின்றனர். திரிதள விமானத்துடன் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர்.பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், அஞ்சலி ஆஞ்சநேயர், நவகிரகம், சாத்தாவுராயன், சாது கருப்பர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளன.

இங்கு நவராத்திரி விழா விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது மற்றும் பங்குனி மாத திருவிழாவும் இத்திருக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கல்வி கேள்விகளில் ஞானத்துடன் திகழவும், விரும்பிய வேலை கிடைக்கவும், பணியில் பதவி உயர்வு கிடைக்கவும், கல்யாண வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு தீ சட்டி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!