திருநீலக்குடி - நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம்

தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம்
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்...!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநீலக்குடி என்னும் ஊரில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள திருநீலக்குடி என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருநீலக்குடியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர். ஒரு அம்பாள் (அனுபமஸ்தினி) திருமணக்கோலத்தில் உள்ளார். மற்றொரு அம்பாள் (பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார். தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம் இதுவாகும்.
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் என்றாலே இந்த எண்ணெய் அபிஷேகம்தான் என்கின்ற அளவுக்கு இந்த அபிஷேகம் சிறப்பும், புகழும் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சுவாமி மேலேயே உவரி விடும். அதாவது எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே (உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாததுபோல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.
ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். இருப்பினும் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இல்லாமல் சொர சொரப்பாக உள்ளது. இத்தல இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது. சித்திரை மாத பிரம்மோற்சவம் 18 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்.
பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர் என்பது இத்தலத்தின் முக்கியமான நம்பிக்கையாகும். கல்யாண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்கு இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வேட்டி படைத்தும், அம்பாளுக்கு சேலை சாற்றியும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu