ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி திருமலையில் சாமி தரிசனம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.
ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதன் பிறகு அவர் கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 11 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட ஜெகன்மோகன் ரெட்டியால் பெற முடியவில்லை. ஆந்திர தேர்தலில் இப்படியொரு மகத்தான வெற்றியைப் பெற்ற சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். விஜயவாடாவில் நான்காவது முறையாகப் பதவியேற்ற சந்திரபாபு நாயுடு முதல் வேலையாகத் திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளார். மேலும், திருப்பதி- திருமலை நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகள் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது,திருப்பதி கோவிலைக் கண்காணிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது.. கஞ்சா, மாமிசம் என திருமலை புனிதம் கெடுக்கப்பட்டது. அந்த பிரச்சினைகளைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்..
திருமலை தேவஸ்தானத்தில் ஊழலை ஒழிக்கவும், இந்து தர்மத்தைப் பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றைத் திருமலையில் இருந்தே சுத்தம் செய்யத் தொடங்கப் போகிறேன். திருமலை புனிதமான இடம். அங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதை ஏற்க முடியாது. கோவிந்தா என்ற சங்கீர்த்தனம் மட்டுமே திருமலையில் இருக்கும். மற்ற சிக்கல்கள் நீக்கப்படும். நான் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும். ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். எனது சீர்திருத்தங்களை இந்த புனிதமான திருமலையில் இருந்தே தொடங்குகிறேன்" என்றார்.
தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, "வறுமையில்லா சமூகத்தைப் படைக்க அயராது உழைக்கப் போகிறோம்.ஆந்திராவை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்த பாடுபடுவேன். எனது ஆட்சியில் எப்போதும் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. இனியும் குற்றங்கள் மற்றும் ஊழல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
2047க்குள் தெலுங்கு மக்கள் உலகிலேயே டாப் இடத்தில் இருப்பார்கள்.. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆந்திராவை நாட்டிலேயே நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவேன். அரசியல் பழிவாங்கல் காரணமாகப் பலரது மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெறுவோம். நல்லவர்களைக் காப்போம். கெட்டவர்களைத் தண்டிப்போம் என்று அவர் தெரிவித்தார். ஆந்திர முதல்வராகப் பதவியேற்ற பிறகு, சந்திரபாபு நாயுடு அவரது மனைவி, மகன் நாரா லோகேஷ், மருமகள் மற்றும் பிற உறவினர்களுடன் அவரது குடும்பத்தினருடன், சிறப்பு விமானம் மூலம் திருப்பதி சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu