ஆடி மாதப் பிறப்பு ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்-ஆடி மாத விஷேசங்கள்
தட்சிணாயன புண்ணியகாலமான ஆடி மாதம் விஷேசங்கள்
தட்சிணாயன புண்ணியகாலமான ஆடிமாதம் இன்று பிறந்தது. ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் சேலம் பட்டை கோயில், பால்மார்க்கெட் பகுதியில் கட்டு கட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி18ஆம் நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல்நாளில் மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நன்றாக முற்றிய தேங்காயைத்தாய் வெடிதேங்காய் போட பயன்படுத்த வேண்டும். பெரிய தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் துளைத்து, அதிலிருக்கும் நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்வார்கள். பிறகு தேங்காயின்மீது இருக்கும் நார்களை சுத்தமாக அகற்றிவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி அலங்காரம் செய்வார்கள். எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை அரைத்து அந்தக் கலவையை துளையின் வழியாக தேங்காயின் உள்ளே செலுத்துவார்கள். அத்துடன் பாத்திரத்தில் பிடித்து வைத்துள்ள தேங்காய்த் தண்ணீரை மீண்டும் சிறிதளவு உள்ளே சேர்ப்பார்கள்.
தேங்காயின் உள்ளே முக்கால் பாகம் மேற்சொன்ன கலவையும் கால் பங்கு தேங்காய்த் தண்ணீரும் இருக்கும். தேங்காய்க்குள் இருக்கும் பொருள்களை வேக வைப்பதற்காக தேங்காய்த் தண்ணீர் மீண்டும் சேர்க்கப்படுகிறது. பின்னர் துளைக்குள் பொருந்துமாறு ஒரு நீளமான குச்சியின் முனையைச் சீவி, தேங்காய்க்குள் பொருத்திவிடுவார்கள்.
குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில் பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் வாதநாராயணன் குச்சிகளையும் பயன்படுத்துவதுண்டு. அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவார்கள்.
தேங்காய் நன்றாக வெந்த பின்னர் டப் என்று வெடிக்கும். ஓடுகளை அகற்றி விட்டு அந்த தேங்காயை சரி சமமாக இரண்டாக உடைத்து சாமிக்கு படைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள். ஆடி மாதத்தின் முதல்நாளில் இன்றைக்கும் பாரம்பரியமாக தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சுட்ட தேங்காய்க்குள் உள்ள எள்ளு, பாசிப்பயறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன் தேங்காயின் சுவையும் இணைந்து அலாதியான ருசியைத் தரும். இந்த தேங்காய் உணவு வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக்கூறுகள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவக் குணம் நிறைந்தது
இந்த மாத விஷேச நாட்கள்...
ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்
ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம்
ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை
ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்
ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி
ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை
ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு
ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி
ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை
ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம்
ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம்
ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்
ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி
ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள்
ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu