ஒரு அடி உயரத்தில் சிவலிங்கம்.கருவறைக்கு முன்னர் ஆமை...!!

12 ஜோதிர்லிங்கங்களுள் இத்தலமும் ஒன்று.ஒரு அடி உயரத்தில் சிவலிங்கம்... கருவறைக்கு முன்னர் ஆமை...!! அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள சகியாத்திரி மலைத்தொடரில் பீமாசங்கர் என்னும் ஊரில் அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில் அமைந்துள்ளது. புனேவிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் பீமாசங்கர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மிகச் சிறிய கிராமமான பீமாசங்கருக்கு செல்ல புனேயில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
இத்தலத்தில் பீமாசங்கரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 12 ஜோதிர்லிங்கங்களுள் இத்தலமும் ஒன்று. மூலவர் கூம்பு வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோயில் திகழ்கின்றது.இக்கோயிலில் லிங்கத்தின் மீது கவசமிட்டே எல்லாப் பூஜைகளும், தரிசனங்களும் நடக்கின்றன. பகல் 12 மணிக்கு மட்டும் மகா பூஜைக்காக சில நிமிடங்கள் கவசம் இல்லாமல் பீமாசங்கரரை தரிசிக்க முடியும்.
இத்தலத்தில் கடல் ஆமை பிரசித்தி பெற்றதாகும். வாயிலின் எதிரே நந்தியும், அதன்பிறகு கடல் ஆமையும் மூலவரைப் பார்த்தவாறு காட்சித் தருகின்றன. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக கருவறைக்கு முன் ஆமை அமைந்துள்ளது.
பீமாசங்கரர் கோயில் முன் மண்டபம் விசாலமாகவுள்ளது. பூமியை ஒட்டி சிவலிங்க ஆவுடையார் வட்டமாகவும், சுமார் ஒரு அடி உயரத்திலும் உள்ளது. இங்கு விநாயகர், கௌரி, இராமர், இலக்குமணர் ஆகிய பரிவார மூர்த்திகள் உள்ளனர். கருவறையின் வெளியே காலபைரவரையும், நேர் எதிரே சனிபகவானையும் தரிசிக்கலாம்.
கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. இந்த நீரை சிறு தொட்டியில் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும் இத்தலத்தில் மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன.
பீமாசங்கரர் கோயிலில் சிவராத்திரி, பிரதோஷம் போன்றவை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? இத்தலத்தில் உள்ள நதியில் நீராடி, பீமாசங்கரப் பெருமானை வழிப்பட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அமைந்துள்ள மோட்ச குண்டத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும்.
இத்தலத்தில் உள்ள சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், பூ மற்றும் வில்வத்தால் அர்ச்சனை செய்தும், அம்பாளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி போன்றவற்றை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu