உலகப்புகழ்பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெறுகிறது

உலகப்புகழ்பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெறுகிறது
X
ஹரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தலமே சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் ஆலயம்.

ஹரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி கொடுத்த தலம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் ஆலயம். ஹரியும் ஹரனும் ஓன்று என்பதை உணர்த்த, மக்களுக்காக அன்னை உமையே ஊசி முனையில் தவம் இருந்தாள். இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக சங்கரன் கோவிலில் அன்னை கோமதியை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா ஆடித்தபசு.


தவமிருக்கும் அன்னைக்காக பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். தவக்கோலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம்.

சங்கரரும் நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு இறைவன் உணர்த்தியருளிய இந்தக் கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது.

உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுவதும், ஆடித்தபசு திருவிழா காணுவதும் வழக்கம், கொரோனா காலமாக இருப்பதால் ஆடிச்சுற்று சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலமாக இருப்பதால், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவையொட்டி பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆடித்தபசு திருவிழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி கலிவரதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 டி எஸ் பி 10 காவல் ஆய்வாளர்கள் 31 உதவி ஆய்வாளர்கள் என 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 4 மணி அளவில் ஆடித்தபசு திருவிழா நடைபெற இருப்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் காவல்துறையினர் பக்தர்களை கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

திருகோவிலில் தபசு விழாவை சிறப்பாக நடத்த வருகை தந்த அர்ச்சகர்கள், வேத விற்பனர்களுக்கு கோவில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காவல்துறைக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே நீண்ட நேர வாக்கு வாதம் நடந்தது. அதன் பிறகு அர்ச்சகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்திப் பரவசத்துடன் ஆடித்தபசு காட்சியை தரிசனம் செய்வது வழக்கம். தொடர்ந்து ஆடித்தபசு திருவிழா நிகழ்சிகளை தரிசனம் காண இன்ஸ்டாநியூஸ் சேனல் இணைப்பை https://www.youtube.com கிளிக் செய்யுங்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!