ஊரும் பேரும்-தெரிந்த ஊர் தெரியாத வரலாறு- எழுவரைமுக்கி

ஊரும் பேரும்-தெரிந்த ஊர் தெரியாத வரலாறு- எழுவரைமுக்கி
X
நாசரேத் எனும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். நம் தமிழ்ப் பெண்களின் கற்பு மாண்பை விளக்கும் மிக சுவாரஸ்யமான கதை

ஊரும் பேரும் எழுவரைமுக்கி தெரிந்த ஊர் தெரியாத வரலாறு

திருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் வழியில், நாசரேத் எனும் ஊருக்கு அருகில் உள்ள அந்தக் கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். என்ன... பெயரே கதை சொல்கிறதா?

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் . நம் தமிழ்ப் பெண்களின் கற்பு மாண்பை விளக்கும் மிக சுவாரஸ்யமான கதை தான் இது..


தென்பாண்டி தேசமாம் திருநெல்வேலிச் சீமை, அகன்று விரிந்து பரந்தோடும் தாமிரபரணியால் செழிப்புற்று- சிறப்புற்று இருந்த காலகட்டம் அது... தாமிரபரணி நதியின் கரைப்பகுதிகள் மட்டுமல்ல, தாமிரபரணியின் இருமருங்கிலும் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் நிலத்தடி நீர் செழுமையாக இருந்தது.

தரையில் சில அடிகள் தோண்டினாலே தண்ணீர் பெருக்கெடுக்குமாம். இப்படி இயற்கை வளம் கொழிக்கும் அந்த கிராமத்தில், கன்னிப் பெண்கள் ஏழுபேர் அந்த பகுதியில் உள்ள ஊருணியில் நீராடச் சென்றார்கள். தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்த சாரல் மழையாலும், அதன் குளிர் கலந்து வீசிய தென்றலும், அவ்வப்போது மேகத் திரை விலக்கி எட்டிப் பார்க்கும் சூரியனின் இளம் மஞ்சள் வெயிலும் ஒரு சேர சங்கமித்திருந்த அந்தச் சூழலால்... சீக்கிரம் கரையேர விடாமல் அவர்களை தடுத்துத்துக் கொண்டிருந்தது. ஏழு பெண்களும் நேரம் போவதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த வழியே வந்த ஆடு-மாடு மேய்க்கும் இளைஞன் .அவர்களுக்கென்றே உரிய குறும்பில் விளையாட்டாக ஒரு காரியம் செய்தான். குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் மொத்தமும் கரையில் இருக்க, அதை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான்.(தற்போது தமிழ் சினிமாவில் வருவது போல). இதைப் பார்த்து விட்ட பெண்கள் எழுவரும், தங்கள் ஆடைகளைக் கொடுத்துவிடும் படி எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. அங்கிருந்து போயே போய் விட்டான்.

பெண்கள் கலங்கினார்கள். அப்படியே எப்படிக் கரையேறுவது? எழுவரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்... பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பிறகு அவர்கள் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம்... ஊருணிக்குள் மூழ்கி, அதில் கலக்கும் நீரோடையின் வழியே, அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்றவர்கள், அங்கேயே தெய்வமாக எழுந்தருளினார்களாம்.

இங்கே ஊருக்குள் பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, ஊர் பூசாரிக்கு காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கும் விஷயத்தைச் சொல்லி, 'எங்களை வழிபட்டால், இந்த ஊரை இன்னும் வளமாக்குவோம்' என்று அருள்புரிந்தார்களாம். அந்தக் கிராமமும் எழுவரைமுக்கி எனப் பெயர் கொண்டது!

நாமும் ஒருமுறை எழுவரைமுக்கி கிராமத்துக்குச் சென்று, அந்த ஊரை மட்டுமல்ல... தங்களின் கதைகளால், வரலாற்றால் நமது பண்டைய பெருமைகளைச் சுமந்து நிற்கும் ஒன்பது தெய்வங்களை வழிபட்டு வரம்பெற்று வருவோம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!