அரச மர வழிபாடு-அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :

அரச மர வழிபாடு-அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :
X

அரசமரம் 

புதன்கிழமை அன்று அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.

அரச மர வழிபாடு?

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு எனப் பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்குத் தான் சிறப்பு அதிகம்.

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. மும்மூர்த்தி வடிவமான அரச மரத்திற்கு பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை நாம் சுவாசித்தால் ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரசமரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும்.

அரசமரம், ஆலமரம் ஆகியவை பற்றிய குறிப்புகள் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் வருகின்றன. உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது அனுவாகத்தில் பலன் தரும் மூலிகைகள் என்ற பாடலில் அரச மரம் பற்றி வருகிறது. யாகத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன இந்த 2 மரங்களினால் செய்யப்படுகின்றன.

"ஊர்த்வ மூலமத: ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்" எனப் பகவத்கீதையில் "அனைத்து மரங்களிலும் நான் அரச மரமாயிருக்கிறேன்" என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அரச மரத்தை உயர்வாகக் கூறியிருப்பது தெரிகிறது.

"ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன"

மூன்று மரங்களின் பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன.

விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத விஷ கிருமிகள் அழிந்துவிடும். மற்றும் திருஷ்டி தோஷங்கள் போன்ற மன ரீதியான பிரச்சனைகளும் நீங்கி நிம்மதி ஏற்படும்.

அரசமரத்தின் வேர்ப் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதன காலம் தொட்டே அரச மரம் இந்தியாவிலிருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்த பிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதி மரம் என்பது அரச மரம்தான். அரசு நீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுப்பூர்வமானதும் மிகப் புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிகச் சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை அறிந்தால் அனைவரும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல

எந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம்?

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும்.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும்.

சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது. நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

அரசமரத்தை எந்தெந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் :

திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்யோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் கிடைக்கும்.

புதன்கிழமை அன்று அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்.

வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கிய பின்பு, அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளிக்கிழமை லட்சுமியை வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் உண்டாகும்.

சனிக்கிழமை அன்று வலம் வருபவர்களுக்கு கஷ்டங்கள் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

அரசமரத்தின் இலை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!