மாசி மாத விசேஷங்கள்

மாசி மாத விசேஷங்கள்
X
மாதங்களில் மாசி மாதத்தினை 'கும்ப மாதம்" என அழைப்பார்கள். மகத்துவமிக்க மாசி மாதத்தில் மாசிமகம், சிவராத்திரி, மாசிஅமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நாட்கள் வருகின்றன.

மாசி பௌர்ணமி :

இந்த ஆண்டு மாசி 15ஆம் தேதி அதாவது சனிக்கிழமை (27.02.2021) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

மாசி மகம் :

மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.

அந்த வகையில், வரும் (27.02.2021) சனிக்கிழமை அதாவது, மாசி 15ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.

மாசி சங்கடஹர சதுர்த்தி :

மாசி 18ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று (02.03.2021) மாசி சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.

மகா சிவராத்திரி :

மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில், வரும் 11.03.2021 வியாழக்கிழமை அதாவது மாசி 27ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

மாசி அமாவாசை :

அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 29ஆம் தேதி அதாவது சனிக்கிழமை (13.03.2021) மாசி மாத அமாவாசை வருகிறது.

காரடையான் நோன்பு :

வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும். இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.

Next Story