இன்று முக்கியமான ஞாயிறு பிரதோஷம்
ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதோஷத்தை ஆதிப்பிரதோஷம் என்று சொல்வார்கள். ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அத்துடன் சூரிய ஹோரையும் இதே நேரத்தில் இருப்பது மிகவும் சிறப்பு.
மறைந்த ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தில் அவசியம் சிவ வழிபாடு செய்ய வேண்டும், தவற விட கூடாது என்று கூறுவார். அதற்கு அவர் கூறும் காரணம் முதலாவது பிரதோஷ நேரம், இரண்டாவது சூரிய நாளில் சூரிய ஓரை , மூன்றாவது இராகு காலம். இந்த மூன்றும் ஒரு சேர அமைவது ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ஆகும். எனவே ஆன்மீக அன்பர்கள் இந்த நேரத்தை தவற விடாமல் இறைவழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும், அதனால் நல்ல பலன்களை அடைய முடியும் . எனவே இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் .
அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் சிவாலயங்களில் நடைபெறும். குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன்.
பிரதோஷ பூஜையின் நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும். கவனிப்பாரில்லாமல் இருக்கும் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடைபெற முடிந்ததை செய்யுங்கள்.
நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி,வில்வம் சார்த்தி சிவ நந்தி தரிசனம் செய்து கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷ நாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும்.
வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி.
ஜாதகப்படி சூரிய திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
இதனால் சூரிய பகவான் அருள் கிட்டும். சூரிய திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
உதயகால பிரதோஷ வேளையில் சிருஷ்டியும், சந்தியா கால பிரதோஷத்தில் சம்ஹாரமும் நடக்கும் என்கின்றன வேதங்கள்.
அதாவது ஒவ்வொரு உயிரும் காலையில் விழித்து எழுவதை ஒரு சிருஷ்டிக்குச் சமம் என்றும், உறங்கச் செல்வதை பிரளயத்திற்குப்பின் வரும் ஒடுக்கத்திற்கு நிகராகவும் கருதப்படுகிறது.
அதிகாலை 04.30 மணி முதல் 06.00 வரையில் உள்ள காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் அதுவே உதயகால பிரதோஷம் அல்லது உக்ஷத் காலம் எனப்படும்.
மாலை 04.30 மணி முதல் 06.00வரையில் உள்ள காலம் சந்தியா கால பிரதோஷம் ஆகும். இதையே நாம் பிரதோஷகாலம் எனப் பொதுவாகச் சொல்கின்றோம். அந்த வேளையில் ஏற்படும் தீமைகளை அழித்து அவற்றிலிருந்து நம்மைக் காக்கும் இறைவனை அந்த நேரத்திலே வழிபடுதலே சிறப்பு என்பதாலேயே பிரதோஷ வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.
தீமைகள் தோன்றும் அந்த பிரதோஷகாலத்தில் நந்திதேவரையும் சிவபெருமானையும் வழிபடவேண்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். எனவே இன்று மறக்காமல் நந்திதேவரையும் சிவபெருமானையும் தரிசனம் செய்யுங்கள்.
ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்வதால் சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.
எனவே இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள்.
-புலவர் நவமணி சண்முகவேலு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu