திமுக கூட்டணியில் 2 லோக்சபா தொகுதி 1 ராஜ்ய சபா எம்.பி. கேட்குது மதிமுக
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் (கோப்பு படம்)
MDMK Alliance Talk
இந்தியாவின் லோக்சபாவிற்கு வரும் மே மாதத்தோடு பதவிக்காலம் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசானது பதவியேற்க வேண்டிய நிலையில் உள்ளது.மிக விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை இந்த மாத இறுதிக்குள்ளாக அறிவிக்க உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாகவே மாநில கட்சிகள் இதற்கான ஆயத்த பணிகளைத் துவங்கி விட்டது.
மத்திய அரசில் தற்போதைய பிரதமர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து முடிக்க உள்ளார். மீண்டும் அவர் பிரதமரானால் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று பிரதமரானவர் என்ற சாதனையைப் பெறுவார். அவரை பதவிக்கு வர விடாமல் தடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் கீழ் போட்டியிட உள்ளது.
தமிழகத்தினைப் பொறுத்தவரை திமுக தலைமையில் அதனுடைய தோழமை கட்சிகள் கூட்டணியோடு வழக்கம் போல் களம் இறங்க பேச்சு வார்த்தையானது துவங்கி நடந்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை தனியாக போட்டியிடுவதாக திட்டம்என சொல்லப்பட்டாலும் கடைசி நேரத்தில் பாஜவோடு கைகோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் தினகரன் ஆகியோர் பாஜவோடு சேர்ந்து களமிறங்கி போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழக திமுக கூட்டணியி்ல் அங்கம் வகிக்கும் வைகோ தலைமையிலான மதிமுக திமுக நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது. முதல் சுற்றின் முடிவில் இரண்டு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதிகளைக் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பேச்சு வார்த்தையில் திமுக சார்பில் டிஆர் பாலு அமைச்சர்கள் நேரு, வேலு, பெரியசாமி, பொன்முடி, பன்னீர் செல்வம், மற்றும் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜீனராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விருதுநகர், திருச்சி, தேனி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலுார் என ஆறு தொகுதிகளில் விருதுநகர், திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டும் வேண்டும் என மதிமுக தரப்பில் விருப்பமானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமான பேச்சுவார்த்தையில் கேட்கும் தொகுதிகளை எல்லாம் தரமுடியாது என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக அர்ஜீனராஜ் கூறுகையில், இரு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி தொகுதியும் கேட்டுள்ளோம். கண்டிப்பாக பம்பரம் சின்னத்தில் தான் எங்களுடைய வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த பேச்சு வார்த்தையில் 5 கேட்பதாக அறிவித்துள்ளது. மார்க். கம்யூ சார்பில் மத்திய குழு தலைவர் சம்பத், நிர்வாகிகள் சண்முகம், கனகராஜ், குணசேகரன், ஆகியோர் பேச்சு நடத்தினர்.
ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை, மதுரை, தொகுதிகளுடன் கூடுதலாக தென்காசி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், என ஐந்து தொகுதிகளைக் கேட்டு பட்டியலை வழங்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இ.கம்யூ வெற்றி பெற்ற நாகப்பட்டினம் தொகுதியை மா. கம்யூ கேட்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தைக்கு பின் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, கடந்த முறையைவிட இம்முறை கூடுதல் தொகதிகளை ஒதுக்க வேண்டும் எனும் விருப்பத்தினை தெரிவித்துள்ளோம். இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால் அரசியல் ரீதியாக தேவையான முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு கூட்டணி தொகுதிகள் இறுதி செய்யப்படும். மக்கள் நீதிமய்யம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார். விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12 ந்தேதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக திமுக துணைப்பொதுச்செயலர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu