ராஜஸ்தான்: சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீ விபத்து
சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயத்தில் பங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.
சுமார் 10 சதுர கிலோ. மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. புலிகளைத் தவிர செந்நாய்கள், சிறுத்தை புலிகள், காட்டுப்பூனைகள், ஓநாய்கள் ஆகியவை இங்கு வசிக்கின்றன.
1,800 கால்பந்து மைதானங்கள் உள்ளடங்கக்கூடிய அளவுக்கு பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக நீர் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.டி-17 என்ற பெயர் கொண்ட புலி ஒன்று தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் தனது குட்டிகளுடன் உலவியதால், அந்தப் புலி தற்போது எங்கு உள்ளது என்பதை வன உயிரியல் ஆர்வலர்கள் தேடி வருகின்றனர்.
கடுமையான தீ விபத்தால், புலிகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. மேலும், அருகில் உள்ள கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என அவர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது தீ விபத்து குறித்து கவலை தெரிவித்ததோடு, அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu