வாண்டுமாமா மறைந்த நாளின்று😢
வாண்டுமாமா
வாண்டுமாமா' மறைந்த நாளின்று😢
'சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி' எனப் போற்றப்படுகிற இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. கௌசிகன், விசாகன் ஆகிய புனைபெயர்களும் உண்டு. திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலிருக்கும் அரிமழம் என்ற ஊரில் பிறந்த இவர் எழுத்தாளராக ஆவதைவிட ஓவியர் ஆகவே விரும்பினார். அதனாலேயே நமக்கு ஏராளம் படக்கதைகள் கிடைத்திருக்கின்றன.
உலோகங்களின் கதை, நகரங்கள் தோன்றிய வரலாறு, நாடுகள் பற்றிய வரலாறு, ஆத்தி சூடி முதலிய செய்யுள்களுக்கு விளக்கங்கள், ஷேக்ஸ்பியர் முதற்கொண்டு ஹெச்.ஜி. வெல்ஸ் வரையிலானவர்களின் கதைகளை எளிய தமிழில் மொழி பெயர்ப்பது என ஏராளமாக எழுதினார். அந்தக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களின் அறிவை படைப்புகள் மூலமாகவே சுவையாகத் தந்தவர்.
வாண்டுமாமா பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் வரலாற்றையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.
கடினமான விஷயத்தைக்கூட எளிதில் புரியவைக்க சித்திரக் கதைகளே சிறந்த வழி என்பதைக் கண்டறிந்து, தமிழில் சித்திரக் கதைகளை உருவாக்கினார். ஓவியர்கள் ரமணி, செல்லம், ராமு ஆகியோரின் கூட்டணியில் இவர் உருவாக்கியவை தமிழின் தலைசிறந்த படக்கதைகள்.
விஞ்ஞானப் புனைவு, வரலாற்றுக் கதைகள், மாயாஜாலக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் போன்றவற்றை காமிக்ஸ் வடிவில் படைத்தார்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த 'வீர விஜயன்' கதையில் நாயகனான வீர விஜயன், வாசகர்களிடம் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்வான். தன் கதையை வாண்டுமாமாவிடம் சொல்லி இருப்பதாகவும், அதை அவர் எழுதுவார் என்றும் பேசுவான். இப்படிப் பல புதுமைகள் செய்திருக்கிறார்!
இப்போதைய டைம் மெஷின் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி 1979லேயே 'கனவா? நிஜமா?' என்ற சித்திரக்கதையை படைத்திருக்கிறார். 'தோன்றியது எப்படி?', 'ஏன்? எதற்கு? எப்படி?' என்பது போன்ற அறிவியல் கட்டுரைகளையும் தந்துள்ளார். இவரது 'பலே பாலு' ஒரு ஜாலியான காமிக்ஸ் தொடராகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் பல நீதிபோதனைகளை, நல்லொழுக்க நெறிகளைச் சொல்லி இருப்பார். சிறுவர் நூல்கள், சித்திரக் கதைகள், அறிவியல் நூல்கள் என்று 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாண்டுமாமா எழுதி இருக்கிறார்.
வேதியியல், வரலாறு, புவியியல், தமிழ் செய்யுள்கள், ஆங்கில துணைப்பாட நூல்கள், ஆங்கில கிளாசிக்குகள் இவையெல்லாம் பள்ளியில் படிக்கச் சிரமமாகத் தெரிகிறதா? அப்படியென்றால் நீங்கள் இன்னமும் வாண்டுமாமாவை வாசிக்கத் தொடங்க வில்லையென்று பொருள். தேடிப்பிடித்துப் படியுங்கள்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu