'தேசியக் குயில்' கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் நினைவு தினம்
டி.கே.பட்டம்மாள்
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்.மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர். அலமேலு என்ற இயற்பெயருடைய "பட்டா" எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள்.
காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறு வயதிலேயே மகளுக்கு பாட்டு கற்றுத் தந்தார். இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என்று கூப்பிடுவார்கள். அந்த பெயரே நிலைத்துவிட்டது. நான்கு வயதில் பாடத் தொடங்கினார்.
3 மாதக் குழந்தையாக இருந்தபோது ரமணரிடம் மகளை அழைத்துச் சென்றார் தந்தை. அவர் குழந்தையின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். 'இசை ஞானம், குரல் வளத்துடன் நீ நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆசியே காரணம்' என்று அடிக்கடி கூறுவார் தந்தை.
முறையாக கர்நாடக இசை கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிதுகாலம் பயின்றார். அதன் பிறகு, மேடையேற்ற தயங்கினார் தந்தை. பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்முகுட்டி அம்மாள்தான் இவரது அபூர்வத் திறனை உணர்ந்து, தந்தையிடம் வாதாடி அனுமதி பெற்றுத் தந்தார்.
கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக, நாயனா பிள்ளையின் கச்சேரிகள் இவருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, விடாமுயற்சியுடன் சாதகம் செய்வார்.அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் 1939 ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.
காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது. காங்கிரஸ் கூட்டங்களில் பாடினார். தமிழ் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தார். இவரது பாடல்கள் இடம்பெற்ற கிராமஃபோன் தட்டுகள் ஏராளமான விற்றன.
நாடு விடுதலை அடைந்த அன்று இரவு முழுவதும் 'விடுதலை, விடுதலை', 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்பது போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.
முத்துஸ்வாமி தீட்சதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். 'தியாக பூமி' (1939) படத்தில் முதன்முதலாக 'தேச சேவை செய்ய' என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். அதேநேரம், பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.
பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவ ரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார். பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 'தேசியக் குயில்' என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான் , சிங்கப்பூர் , பிரான்சு, ஜெர்மனி , அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ' அகிகோ 'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu