மின்சார வாகனங்களுக்கு ரெயில் நிலையங்களில் சார்ஜிங் செய்யும் வசதி
மின்சார வாகன சார்ஜிங் நிலையம். கோப்பு படம்.
எரிபொருள் தட்டுப்பாடு, அவைகளின் விலை உயர்வு, உலக வெப்பமயம் ஆகுவதால் ஏற்படும் பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றும் நோக்கில் செயல் திட்டங்களை உலகநாடுகள் உருவாக்கி வருகின்றன. மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி இந்தியாவும் பயணித்து வருகிறது. நாடு முழுவதும் இருசக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி உள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே கட்டமைப்பை கொண்டது இந்தியா. இந்தியா முழுவதும் ரெயில்களில் வருடத்திற்கு சுமார் 500 கோடி பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த ரெயில் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய ரெயில்வே பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் சுமார் 46 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரெயில்வே இலக்கு நிர்ணயித்து செயல் திட்டத்தை தொடங்கி உள்ளது. ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மின்சார வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்த இந்திய ரெயில்வே திட்டம் தயாரித்துள்ளது. இதற்காக இந்திய முழுவதும் ரெயில் நிலைய வளாகங்கள் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் எல்லாம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகளை ஏற்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சார்ஜிங் பாயிண்ட்களை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் மின்சார வாகனங்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இது பொதுமக்களுக்கும்,ரெயில் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நிலையில் இந்திய ராணுவ படையிலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இலகு ரக வாகனங்களில் 25 சதவீதத்தையும், ராணுவ பஸ்களில் 38 சதவீதமும், படை பிரிவில் உள்ள மோட்டார் சைக்கிள்களில் 48 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் தேவை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக ராணுவ அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களுக்கு வெளியே வாகன நிறுத்தும் இடங்களில் மின்சார சார்ஜிங் வசதிகளை செய்ய தேவையான உட்கட்டமைப்பு பணிகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சூரிய சக்தி சார்ந்த சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மாற்றம் செய்யும் திட்டத்தில் இந்த நடவடிக்கையை ராணுவம் எடுக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா பருவநிலை மாற்றம் பாதிப்பில் இருந்து விடுபடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu