திருமழபாடி நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் பக்தர்கள் தரிசனம்.

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில் திருநந்தியெம்பெருமான், சுயசாம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் உள்ள வைத்தியநாதசுவாமி கோவிலில் திருநந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவியாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

சிவப்பெருமான் தனது பாதுகாவலரான நந்தியெம்பெருமானுக்கு தானே முன்னிற்று திருமணம் செய்ததாக கூறும் புரானநிழச்சியும், நந்திதிருமணம் கண்டால் முந்தி திருமணம் என்ற ஐதீகமும் கொண்ட நிகழ்ச்சிதான் நந்தியெம்பெருமான் திருமணம்.

இந்நிகழ்ச்சியில் வசிட்ட முனிவரின் புதல்வியான சுயசாம்பிகை தேவியாருக்கும், திருவையாறு சிலாத முனிவரின் புதல்வரான திருநந்தியெம் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாரப்பர் தனது கோவிலில் இருந்து காலையில் மாப்பிள்ளை நந்தியெம்பெருமானுடன் புறப்பட்டு வைத்தியநாதன்பேட்டை வழியாக திருமழப்பாடிக்கு எழுந்தருளினார்.

இதனையடுத்து கோவில் முன்பு உள்ள மேடைக்கு மணமகன் திருநந்தியெம்பெருமானும், மணப்பெண் சுயசாம்பிகைதேவியாரும் அழைத்து வரப்பட்டனர். மேடையில் சுவாமிகள் இருவருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், பால் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கும்பநீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

மணமகன், மணமகள் நாதஸ்வர ஊஞ்சல் உற்சவத்துடன் மாலை மாற்றுதல், காப்பு கட்டுதல் நடை பெற்றது. தொடர்ந்து திருநந்தியெம்பெருமானும், சுயசாம்பிகை தேவியாருக்கும் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டனர்.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் மணமகன் நந்தியெம் பெருமான், மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார்.

நந்தி திருமணத்தை பார்த்தால் முந்தி திருமணம் என்ற ஐதீகத்தையொட்டி, திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் பெருந்திரளாக திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.




.


Tags

Next Story