மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவரும் மது குடிக்க கூடாது - எச்சரிக்கும் புது ஆய்வு!
Wife pregnant husband should not drink alcohol- கர்ப்பிணி பெண், கணவர் இதை கவனத்தில் வைக்க வேண்டும் ( கோப்பு படம்)
Wife pregnant husband should not drink alcohol- பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை.
ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
கருவுற்றிருக்கும் பெண் வாரம் ஒருமுறை மது அருந்தினாலும், அது குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை மற்றும் முக வடிவத்தைப் பாதிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும், பல ஆண்டுகளாக, பொது சுகாதார அதிகாரிகள், கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான அளவில் ஆல்கஹால் அருந்தலாம் என்னும் கூற்று தவறானது என்று பிரசாரம் செய்து வருகின்றனர். எனவே கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் மது அருந்த வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கர்ப்ப காலத்தில் மது அருந்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அதிக குடிப்பழக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவு மது உட்கொள்வது அபாயத்தைக் குறைக்குமா என்ற ரீதியில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கர்ப்பிணிப் பெண் மது அருந்துவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சாத்தியமான பிரச்னைகளில் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள், குறிப்பிட்ட முக அம்சங்களில் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அவை மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறுடன் (foetal alcohol spectrum disorders - FASD) தொடர்புடையவை. அதே நேரம் நடத்தை, அறிவாற்றல் மற்றும் கற்றல் சிக்கல்களும் இதில் அடக்கம். எனவே FASD பிரச்னையின் கீழ் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தந்தையின் மதுப்பழக்கம்
தாய் மது அருந்துவதால் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், FASD பிரச்னைக்குப் பங்களிக்கும் மற்றொரு சாத்தியமான காரணி பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது: `தந்தையின் மதுப்பழக்கம்’
ஆம், கருவில் இருக்கும் குழந்தையின் தந்தையுடைய குடிப்பழக்கம் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்வது இல்லை.
கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சி "பெண்களை மையமாகக் கொண்டது. தாய்வழிப் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ளது. உண்மையில் நாம் ஆண்கள் தரப்பில் கருவை பாதிக்கும் சாத்தியமான பிரச்னைகளை பற்றி இன்னும் அதிக ஆய்வுகளை நடத்தவில்லை” என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் மைக்கேல் கோல்டிங் கூறுகிறார்.
இருப்பினும் கோல்டிங் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக குழந்தையின் ஆரோக்கியத்தில் தந்தையின் பங்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
"பல ஆண்டுகளாகப் பெண்கள் பலர், 'கர்ப்ப காலத்தில் நான் ஒருபோதும் குடித்ததில்லை, ஆனால் என் குழந்தைக்கு மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறு (FAS) உள்ளது - மேலும் எனது கணவர் நாள்பட்ட மதுப்பழக்கம் கொண்டவர்’ என்று கூறும் கதைகளை நாங்கள் கேட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். ஆனால் இதுபோன்ற கதைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி, ஒரு சாத்தியத்தை முன்வைக்கிறது: "கணவருக்கு மதுப் பழக்கம் இருந்தது என்று சொன்ன இந்தத் தாய்மார்களின் கூற்றுக்கும் குழந்தைகளின் உடல்நலனுக்கும் சம்பந்தம் இருக்கலாம். "சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை-சமீபத்திய ஆய்வுகளில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்தரிப்பதற்கு முன் தந்தையின் மதுப்பழக்கம் அவரது சந்ததியினரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அசாத்தியமாகத் தோன்றலாம்.
ஆனால் சமீபத்திய ஆய்வுகள், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சீனாவில் 2021இல் 5 லட்சத்துக்கும் அதிகமான தம்பதிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் கருத்தரிப்பதற்கு முன் கணவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், பிறக்கும் குழந்தைக்கு மேல்வாய்ப் பிளவு (cleft palate), பிறவி இதய நோய், செரிமான மண்டலத்தில் கோளாறுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகளின் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருவை சுமக்கும் தாய் கர்ப்ப காலத்தில் மது அருந்தவில்லை என்றாலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.
சீனாவின் மற்றொரு மக்கள் தொகை ஆய்வில், பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள 5,000 குழந்தைகள், குறைபாடு இல்லாத 5,000 குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டனர்.
ஒட்டுமொத்த ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. குடிப்பழக்கம் இல்லாத தந்தையை ஒப்பிடுகையில், மனைவி கருத்தரிப்பதற்கு முன் மூன்று மாதங்களில் கணவர் ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர்களுக்கு மேல் மது அருந்தி இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் தோராயமாக மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.-தந்தைவழி குடிப்பழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிக்கல்களுடன் தொடர்புடையது.
பிறப்புக் குறைபாடுகளின் ஒட்டுமொத்த ஆபத்து இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2021ஆம் ஆண்டு சீனாவில் பல்வேறு பிறப்புக் குறைபாடுகள் பற்றிய ஆய்வில், எடுத்துக்காட்டாக, தீவிர பிரச்னையான மேல்வாய்ப் பிளவு (cleft palate) கொண்ட 164,151 குழந்தைகளில் வெறும் 105 குழந்தைகளின் தந்தைகளுக்கு குடிப்பழக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதே நேரம் மதுப்பழக்கம் இல்லாத தந்தைகளை ஒப்பிடுகையில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல்வாய்ப் பிளவு பிரச்னை ஏற்படும் அபாயம் 1.5 மடங்கு அதிகம்.
"எங்கள் ஆய்வு முடிவுகளின்படி, 31.0 சதவிகிதம் தந்தையின் குடிப் பழக்கம் பிறப்புக் குறைபாடுகள் தொடர்பான வாய்ப்பை கணிசமாக அதிகரித்திருப்பதால், எதிர்கால தந்தைகள் தங்கள் மது உட்கொள்ளலைக் குறைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu