உளுத்தம் பருப்பு வெங்காய சட்னி செய்வது எப்படி?

Ulutham paruppu Onion Chutney Recipe- உளுத்தம்பருப்பு வெங்காய சட்னி ( கோப்பு படம்)
Ulutham paruppu Onion Chutney Recipe- காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? இன்னும் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? இன்னும் யோசனை செய்து கொண்டு தான் இருக்கிறீர்களா? சட்னி செய்யலாம் என்றால் தக்காளி இல்லையா?
அப்படியானால் தக்காளி இல்லாமல் வெறும் உளுத்தம் பருப்பையும், வெங்காயத்தையும் வெச்சு ஒரு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி அட்டகாசமாக இருக்கும் மேலும் இது உடலுக்கு சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உளுத்தம் பருப்பு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சிறிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கல் உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுத்தம்பருப்பு வெங்காய சட்னி தயார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu