தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் குறித்து நீங்கள் யோசித்தது உண்டா?

தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் குறித்து நீங்கள் யோசித்தது உண்டா?
X

TV viewing habits- டிவி பார்த்து நேரத்தை வீணடிக்கிறீர்களா? (மாதிரி படம்)

TV viewing habits- உங்கள் தொலைக்காட்சி பழக்கம் உங்கள் வாழ்க்கையை பறிக்கிறதா? என்பது குறித்து யோசித்து பாருங்கள். பல உண்மைகள் தெரிய வரும்.

TV viewing habits- உங்கள் தொலைக்காட்சி பழக்கம் உங்கள் வாழ்க்கையை பறிக்கிறதா?

நிம்மதியான ஒரு மாலை வேளை. பணி முடிந்து வீடு திரும்பிய சோர்வில் சாய்வு நாற்காலியில் விழுகிறீர்கள். தினசரி செய்திகளுக்குப் பின், தொடர் நாடகம் அல்லது விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோவில் மூழ்கிப்போகிறீர்கள். இந்தப் பழக்கம் பாதிப்பில்லாதது போல் தோன்றினாலும், நம் உடல், மனம் மற்றும் உறவுகளில் கூட மறைமுகமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இடைவிடாத தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்

சர்க்கரை நிறைந்த பானங்கள் போல, தொலைக்காட்சி உங்களை ஆரம்பத்தில் திருப்தி கொள்ளச் செய்கிறது. எனினும், நீண்ட நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சிற்றுண்டி கலாச்சாரத்தை வளர்க்கிறது. சோபாவில் படுத்தபடியே உணவை அள்ளிப்போடும் பழக்கம் உடற்பருமன், இதய நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பு அசைவின்றி அமர்வதும் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது.


மங்கும் கவனம் மற்றும் படைப்பாற்றல்

தொலைக்காட்சி ஒரு எளிதான பொழுதுபோக்கு. இது உங்கள் மூளையைச் சிந்திக்கத் தூண்டுவதில்லை. தொடர்ந்து பார்க்க பார்க்க, அதுவே உங்கள் மூளையின் இயல்பாக மாறிவிடுகிறது. புத்தகம் வாசிப்பது, இசைக் கருவியை வாசிப்பது, தோட்டத்தில் செடிகளைப் பராமரிப்பது என உங்களை மேம்படுத்தக்கூடிய செயல்களுக்கு நேரமும், மனமும் மிஞ்சுவதில்லை. இந்தத் திறமையின்மையே உங்கள் படைப்பாற்றலையும் குறைத்து விடுகிறது.

தூக்கத்தின் எதிரி

அதிரடி நிறைந்த திரைப்படம், விறுவிறுப்பான கிரிக்கெட்…எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், நீல ஒளி கண்களைப் பாதிக்கும். இது உங்கள் உடலின் மெலடோனின் ஹார்மோன் அளவைக் குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைச் சீர்குலைக்கும். படுக்கைக்குச் சென்றும் மனம் திரைக்காட்சியில் பார்த்தக் கட்சிகளை ஓட்டிக்கொண்டே இருக்கும்! இந்தத் தூக்கமின்மை உங்களை மறுநாள் சோர்வடையச் செய்வதுடன், மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற ஆபத்துக்களையும் அதிகரிக்கிறது.

உறவுகளில் ஏற்படும் தாக்கம்

எத்தனை குடும்பங்களில் உணவருந்தும் நேரம் கூட தொலைக்காட்சி பார்ப்பதில் கழிகிறது? விருந்தினர் வரும்போது கூட வரவேற்பறையில் அமர்ந்து பேசுவதற்கு பதிலாக டிவியே நம் துணை! இந்த சிறிய பழக்கங்கள் வீட்டிலுள்ளவர்களுடனான உறவைப் பாதிக்கும். தொலைக்காட்சி சத்தத்தில் உண்மையான உரையாடல் மறைந்து போகும் அபாயம் நிறைய உண்டு.


இதை மாற்ற முடியுமா?

கட்டாயம் முடியும்! ஒரு நாளில் எத்தனை மணி நேரம், என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் என வரையறை வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, சாப்பிடும்போதும், படுக்கை அறையிலும் டிவியை தவிர்க்கவும். தியானமோ, புத்தகம் வாசிப்போ உங்கள் உறக்க சுழற்சியை மேம்படுத்த உதவும். நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தல் உங்கள் வாழ்வில் புத்துணர்வைத் தரும்.

உங்கள் வாழ்க்கையின் ரிமோட் உங்கள் கையில்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்போதும் ஓடிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், நீங்கள் நேரத்தை இழந்த பின் மீட்டெடுக்க முடியாது. என்ன பார்க்கிறோம், எவ்வளவு நேரம் பார்க்கிறோம் என்பதில் விழிப்புணர்வோடு இருங்கள். தொலைக்காட்சி உங்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து விட வேண்டாம்!

Tags

Next Story
ai in future agriculture