ஆரோக்கிய உறவில் நஞ்சை கலக்காதீர்கள்..

ஆரோக்கிய உறவில் நஞ்சை கலக்காதீர்கள்..
X
Toxic Relationship Meaning in Tamil-நீங்கள் ஆரோக்கியம் என நினைத்து உறவில் கொஞ்சம், கொஞ்சமாக நஞ்சு அதிகரிக்க செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

Toxic Relationship Meaning in Tamil

நமது உறவிலும் நாம் ஆரோக்கியம் என்று செய்யும் சில விஷயங்கள் பின்னாளில் விஷத்தன்மையாக மாறலாம். சில சமயங்களில் உண்மை கசக்கும் எனில் அதை மறைக்கவும் தெரிய வேண்டும். சில சமயங்களில் அந்த கசப்பை அன்றே உட்கொண்டு, தீர்வை கொண்டு, இல்வாழ்க்கை பயணத்தை தொடரவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஓர் உறவில் ஒருவரின் எதிர்பார்ப்பு என்பது ஆளுக்கு ஆள் மாறும். தன் இணை தன் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்கும் ஆள்கள் உண்டு. அதையே சுமையாகக் கருதுபவர்களும் உண்டு.

ஓர் உறவில் விதிகள் இருந்தால், அது எந்த மாதிரியான விதிகளாக இருந்தாலும், அது டாக்ஸிக் ஆகத்தான் மாறும்.

ஒருவரின் கண்ணீருக்கு இன்னொருவர் மதிப்பு கொடுக்கவில்லையென்றால், அந்த அழுகை அவரை எதுவும் செய்யவில்லையென்றால் அங்கே காதல் இல்லையென்றுதான் ஆகும். அந்த உறவும் டாக்ஸிக் ஆகத்தான் மாறும்.

உறவில் காதலைவிட முக்கியம் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை. அது சுய மரியாதையாகவும் இருக்கலாம்; தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீதான மரியாதையாகவும் இருக்கலாம். மரியாதை இல்லாத உறவில் மகிழ்ச்சியைவிட கசப்புகளே அதிகம் இருக்கும்.

தன் துணையை எடுத்தெறிந்து நடப்பதும் தவறும், தனது துணையை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்து காத்திருப்பதும் தவறு. ஆக மொத்தத்தில் நீங்கள் ஆரோக்கியம் என நினைத்து உறவில் கொஞ்சம், கொஞ்சமாக நஞ்சு அதிகரிக்க செய்யும் விஷயங்கள் என்னென்ன என பார்க்கலாம்

சிலர் எந்தப் பிரச்னை வந்தாலும் ரிலேஷன்ஷிப்பைக் காரணமாக வைத்து மிரட்டுவார்கள். மிரட்டினாலே அது டாக்ஸிக்தான். யோசனையே வேண்டாம்.

ஒரு சிலருக்குக் கடந்த காலம் பிரச்னையாக மாறும். இதற்கு முன்னர் இன்னொரு உறவில் இருந்திருப்பார். இந்த உறவின் தொடக்கத்தில் அதைச் சொல்லியிருந்தாலும், துணை அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால், பிற்காலத்திலே அதையே வைத்து மட்டம் தட்டுவார். குறை சொல்வார்.

சிலர் என் துணை தான் எனக்கு எல்லாமுமே என்பார்கள். அவர்களையே முழுவதுமாக சார்ந்திருப்பார்கள். அனைத்தையும் ஆலோசனை கேட்டு செய்வது தவறே இல்லை. ஆனால், அனைத்திற்கும் துணையை சார்ந்திருப்பது தான் தவறு. ஏதேனும் ஒரு தருணத்தில், சூழலில், இது உங்கள் உறவில் மந்தம் அல்லது கசப்பு ஏற்பட காரணமாக அமையலாம். எனவே, உங்கள் எல்லா செயல்களுக்கும் துணையை சார்ந்திருப்பதை முதலில் தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் ஒரு உறவில் இருக்கும்போது, அதில் எல்லைக்குட்பட்ட நச்சுத்தன்மையாகத் தோன்றும் சில பண்புகளை உங்கள் பார்ட்னரிடம் அடையாளம் காண்பது கடினம். அவ்வாறு இருந்தால், நீங்கள் அவர்களின் நடத்தைக்கு மிகவும் பழக்கமாகிவிட்டீர்கள் மற்றும் நீங்கள் அவர்களின் ஆளுமையால் உங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

உறவில் கணவன் - மனைவி இருவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளும் இருக்கும், தனிதனியாக அவரவர்களை மட்டும் சார்ந்த சில பிரச்சனைகளும் இருக்கும். இதில், நான் சோகமாய் இருக்கிறேன், என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என நீங்கள் ஆதங்கத்தை கொட்டலாமே தவிர, அனைத்து உணர்வு சார்ந்த பிரச்சனைக்கும் உங்கள் துணையே தீர்வளிப்பார் என எதிர்பார்க்கக் கூடாது. ஒரு நேரத்தில், உங்கள் துணையால் முடியவில்லை எனும்போது, அவர் மாறிவிட்டார் என நீங்களே தவறாக உணர துவங்குவீர்கள். இது உங்கள் உறவில் தேவையற்ற சந்தேகங்கள், பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையும்.

கட்டுப்பாடு :

உங்கள் துணை உங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், அது நிச்சயமாக நச்சுத்தன்மை கொண்ட உறவுதான். உங்கள் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பவரே சிறந்த துணைவர். நல்ல உறவு என்றைக்குமே உங்களை சிறந்த மனிதராக மாற்றுமே தவிர, உங்களை என்றைக்கும் எந்த வகையிலும் அது கட்டுப்படுத்த நினைக்காது.

அந்நியப்படுதல் :

உங்கள் துணை உங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அந்நியப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், அது நிச்சயமாக நச்சுத்தன்மை வாய்ந்தது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரா என்பதைப் பாருங்கள். எல்லா அழகான விஷயங்களிலிருந்து உங்களை விலக்கி வைத்திருந்தால், அது உங்கள் மனதையும் உங்கள் வளர்ச்சியையும் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

அவமரியாதை:

எந்த சூழ்நிலையிலும் நீங்களும் உங்கள் பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அவமரியாதை செய்யக்கூடாது. உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால், தாழ்வு நேரங்களில் நீங்கள் எப்படி நடத்தப்படுகிறீர்கள் என்பதுதான் ஆரோக்கியமான உறவை வரையறுக்கிறது. அது மரியாதையற்ற நிலைக்கு வந்தவுடன், ஆரோக்கியமான இடத்திற்கு செல்வது மிகவும் கடினம் என்பதுதான்.

நேர்மை:

உறவில் கணவன் - மனைவி நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஒருவேளை அந்த நேர்மையே உங்கள் உறவை பதம்பார்க்கும் எனில், அந்த நேர்மையை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம். அதற்கென துரோகம் செய்யலாம் என்பதல்ல. சின்ன, சின்ன உண்மைகள் உங்கள் துணையை பாதிக்கும் எனில், அதை மறைக்கலாம் அவ்வளவு தான். உறவில் உண்மையை மறைக்க கூடாது, ஒளிவுமறைவு இன்றி இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், சில உண்மை கசக்கும் எனில், சில விஷயம் கசக்கும் எனில், அந்த கசப்பை போக்க இனிப்பு சாயம் பூசுவதில் தவறே இல்லை.

காதலர்கள் என்றாலும், கணவன் மனைவி என்றாலும் ஒரு ஜோடி என்பது இரண்டு பேர். அதிலும் அவரவருக்கான இடம் நிச்சயம் வேண்டும். ஒரே ஜோடி என்பதால் ஒருவருக்கென தனிப்பட்ட நேரமோ, வேலையோ இருக்கவே இருக்காதென நினைக்கக் கூடாது. அந்த இடம் நிச்சயம் இருவருக்கும் வேண்டும். அது இல்லாத உறவு எப்போது வேண்டுமென்றாலும் டாக்ஸிக் ஆக மாறலாம். ஒருவர் பேசாமலே இருப்பதால், அந்த இடம் கேட்கவில்லை என்பதால் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென நினைக்கக் கூடாது.

இன்னொரு விஷயம். ஒரே ஒரு சம்பவத்தை வைத்து toxic relationship என முடிவுக்கு வரக்கூடாது.

ஒருவருக்கு தங்கள் உறவு இப்படி டாக்ஸிக் ஆக மாறுகிறது எனத் தோன்றினால் அவர் செய்ய வேண்டியது பேசுவதுதான். பிரச்னையில் யார் விக்டிமோ அவர் முதலில் பேச வேண்டும். தன்னை எது பாதிக்கிறதென துணையிடம் சொல்ல வேண்டும். அவர் அதைத் தெரியாமல் கூட செய்யலாம். அதைப் புரிய வைக்க வேண்டும். புரிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ள காலம் தர வேண்டும். ஒரே நாளில் மாறுவது எல்லாம் சாத்தியமில்லை.

உறவில் எல்லாமே இனிமையாக அமைய வேண்டும் என்றில்லை... சில சமயங்களில் வருத்தத்தை தவிர்க்க முடியாது எனில், அதை அன்றே முழுவதுமாக வருந்தி முடித்துவிடுங்கள். சில சமயம் வருத்தத்தை சுமந்து கொண்டு செல்வதற்கு பதிலாக, அதை ஒரே நாளில் இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக வாழ்க்கை நடத்துவது சிறந்தது.

இன்பமும், துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story