தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்

இந்தியாவிற்கு தேநீர் அறிமுகமாகி பல நூற்றாண்டுகள் ஆனாலும், நம் காலைப் பொழுதுகள் இன்னமும் தேநீர் இன்றி துவங்குவதில்லை. சாலையோர கடைகளில் தொடங்கி, வீடுகளில் ஆவி பறக்கும் தேநீர் வரை, நம்முள் யாருக்கும் அது அந்நியமில்லை. ஆனால், உலகின் மறுபக்கத்தில், ஜப்பான் எனும் தீவு தேசத்தில், தேநீர் வெறும் காலை பானமல்ல; அது ஒரு கலை, ஒரு மரபு.
சடங்காகும் தேநீர்
'சனோயு' என்று அழைக்கப்படும், ஜப்பானிய தேநீர் விழா, தியானம் மற்றும் அழகியலின் அற்புதமான கலவையாகும். விருந்தினர்களை வரவேற்கும் ஒரு சடங்கான இது, ஒவ்வொரு செயலும், பொருளும் தத்துவார்த்த அர்த்தம் கொண்டதாய் வடிவமைக்கப்படுள்ளது. ஜப்பான் நாட்டின் தனித்துவமான இந்த மரபின் வேர்களை வரலாற்றின் பக்கங்களில் தேடலாம்.
புத்த துறவிகளின் பானம்
தேநீர் முதன்முதலில் ஜப்பானுக்கு வந்தது 9-ஆம் நூற்றாண்டில். சீனாவில் பயணம் செய்த புத்த துறவிகள் தான் இதை அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில், தியானத்தின் போது விழிப்புடன் இருக்க துறவிகளால் மருத்துவ பானமாக இது உட்கொள்ளப்பட்டது. படிப்படியாக, உயர் வகுப்பினர் மத்தியில் தேநீர் ஒரு இடத்தைப் பிடித்தது. 12-ஆம் நூற்றாண்டில், 'ஈசாய்' என்ற துறவி 'மாட்சா' எனும் உயர்ந்த தரம் வாய்ந்த பச்சைத் தேநீர் பொடியை, தயாரிக்கவும், பரிமாறவும் தனித்துவமான முறைகளை அறிமுகப்படுத்தினார்.
சாமுராய்களுக்குப் பரிமாறப்பட்ட தேநீர்
13-ஆம் நூற்றாண்டில் இருந்து, ஜப்பானை சாமுராய் வீரர்கள் ஆட்சி செய்தனர். போர், அதிகாரத்தில் முனைப்பு என இருந்த அவர்களுக்கும் 'மாட்சா' தேநீர் அமைதி தரும் பானமாக மாறியது. இந்த காலகட்டத்தில் தான், ஆடம்பரமான தேநீர் விழாக்கள் உருவாகின. விலை உயர்ந்த தேநீர் வகைகளை அடையாளம் காணும் போட்டிகளும் நடத்தப்பட்டன.
'வபி-சபி' : எளிமையின் அழகு
16-ஆம் நூற்றாண்டில், 'சென் நோ ரிக்யூ' என்ற ஜென் புத்தமத குரு இந்த தேநீர் சடங்குகளை புரட்சிகரமாக மாற்றினார். ஆடம்பரத்தை விடுத்து, எளிமையை வலியுறுத்தி, அழகியலுக்கும் ஆன்மிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 'வபி' (எளிமை), 'சபி' (பழமையின் அழகு) என்ற தத்துவம் இதன் அடிநாதமாய் இருந்தது.
தேநீர் அறை : அமைதியின் சரணாலயம்
தேநீர் விழாவுக்கென்று தனியாக 'சாஷிட்சு' எனும் அறைகள் உருவாக்கப்பட்டன. இவை இயற்கையான பொருட்களால் அலங்காரமற்ற முறையில் கட்டப்பட்டன. ஜன்னல்கள் குறைந்த வெளிச்சத்தை மட்டுமே அனுமதிக்கும்; இது விருந்தினர்களின் கவனத்தை அந்தத் தருணத்தின் மீது குவிக்க உதவியது.
கலைநயம் மிக்க தேநீர் சடங்கு
மட்பாண்டக் கிண்ணங்கள், மூங்கிலால் ஆன கரண்டிகள், பட்டுத் துணிகள் – இப்படி சடங்கில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. விருந்தினர்கள் அறைக்குள் நுழையும் முறையில் தொடங்கி, தேநீர் தயாரித்தல், பரிமாறுதல், உபசரித்தல் என ஒவ்வொன்றும் நேர்த்தியாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அசைவும் அர்த்தம் கொண்டது.
தேநீரில் தத்துவ தரிசனம்
'சனோயு' வெறும் தேநீர் அருந்தும் நேரமல்ல, ஒரு தத்துவ அனுபவமாக கருதப்படுகிறது. இந்த சடங்கின் நான்கு முக்கிய கொள்கைகள்: 'வா' (இணக்கம்), 'கேய்'(மரியாதை), 'செய்' (தூய்மை), 'ஜக்கு' (அமைதி). ஜென் புத்த மதத்தின் செல்வாக்கால், இந்த நடைமுறைகள் மனதை அமைதிப்படுத்தி, நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்த உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நவீன காலத்திலும் நிலைத்திருக்கும் மரபு
விரைவான இன்றைய உலகிலும், ஜப்பானில் 'சனோயு' அதன் பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பலர் இன்றும் இந்த தேநீர் சடங்கில் பயிற்சி பெறுகிறார்கள். நம் அன்றாட வாழ்க்கையிலும் 'மாட்சா' தேநீர் இடம் பெற்றுள்ளது. சில நேரங்களில், நாமும் அலைபாயும் மனதை அடக்கி, அந்த ஒரு கப் தேநீரை சுவைக்கையில், ஜப்பானியர்களின் இந்த அற்புத கலையை நினைத்துப் பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu