ஆறுவது சினம் என்றார் ஔவை. ரௌத்திரம் பழகு என்கிறார் பாரதி

Motivational Rowthiram Pazhagu Quotes
பாரதி தனது புதிய ஆத்திச்சூடியில் "ரௌத்திரம் பழகு " என்று சொல்லி இருக்கிறார். அதாவது கோபப்பட பழகு என்பதுதான் அதன் பொருள் என்பதை சொல்லித் தந்திருப்பார்கள்.
சினம் தவிர் என்று சொல்வார்கள். அதென்ன ரௌத்திரம் பழகு...எப்போதாவது சிந்தித்தோமா?.
சொல்லித் தந்ததை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்வதுதான் நமது பழக்கம். மற்றபடி சின்ன வயதில் அதைப்பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை.
கோபத்திற்கு ஆளாளாளுக்கு ஒவ்வொரு பொருளை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கோபத்தை சினம் என்றும் சொல்கிறோம். ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் கோபமாக மாறும். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு "என்று படித்திருக்கிறோம்.
கோபம் பாவம். சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி என்று கற்றிருக்கிறோம்.
அர்த்தம் ஒன்றுதானே என்ற அளவில் புரிந்து கொண்டு "ஆறுவது சினம் " என்கிறாளே ஔவை. அப்படியானால் பாரதி அவ்வையின் கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையவனோ என்று எல்லாம் என்ன வேண்டாம். நிச்சயம் இல்லை.

ஔவை உள்ளத்திற்காக சொன்னாள். பாரதி உலகத்துக்காக சொன்னான். இரண்டையும் வேறு விதமாக பார்த்தல் நலம்.
இப்படி அனைவரும் அறிந்த வார்த்தைகளை விட்டுவிட்டு அறியாத புதியதோர் வார்த்தையைப் பாரதி பயன்படுத்தியதின் காரணம் என்னவாக இருக்கும் ?
தமிழில் ரகரம் மொழி முதல் வராத ஒரு எழுத்து. அதை மொழிமுதல் எழுத்தாக வைத்து எழுதிய நோக்கம் என்ன?
நமக்கு சொல்லித் தந்த பொருளை விட சற்று மாறுபட்ட பொருள் கொண்டது ரௌத்திரம்.
யாராவது திட்டினால், .அல்லது அடித்தால் உடனடியாக நமக்கு வருவது கோபம்.
பதிலுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும்.
நம்மிடம் கேட்காமலேயே நமது பொருளை யாராவது எடுத்துவிட்டால். ஏன் என்னிடம் கேட்காமல் எடுத்தாய்? என்று கத்துவோம்.
அவமானப்படுத்தும் வகையில் யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், அநியாயத்துக்குக் கோபம் வரும்.
வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கும்போது யாராவது முண்டியடித்து முன்னால் சென்று விட்டால், கோபத்தில் கத்தி நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
வெளியில் போயிட்டு வீட்டிற்கு வந்ததும் இருக்கிற கோபத்தை எல்லாம் சாப்பாட்டில் காட்டுவோம்.
இப்படி நமது கோபம் யாவும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும்.

பாரதி சொல்ல வந்த ரௌத்திரம் சுயநலம் சார்ந்ததல்ல. சமூக அக்கறையோடு கூடிய கோபம் வேண்டும் என்கிறார் பாரதி.
சமூக சிந்தனையும் பொதுநலமும் சமூக அக்கறையும் கொண்டு நியாயமான காரணத்திற்காக சரியான வேளையில் வெளிப்படுத்தப்பட வேண்டிய கோபம் ஒன்று உண்டு.
அந்த கோபம் நமக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் ரௌத்திரம் பழகு என்று கூறுகிறார் பாரதி.
வெறும் ஆத்திரத்தின் வெளிப்பாடல்ல ரௌத்திரம்!! உண்மை விளங்காவிடில் உரக்கச்சொல்லும் ஒரு வித அரச குணம் ரெளத்திரம், உரிமைகள் பறிக்கப்படும் பொழுது வெளிப்படும் வீர குணம் ரெளத்திரம், நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே என கூக்குரல் இடும் நக்கீரர் குணம் ரெளத்திரம்
கோபம் வர வேண்டும். அந்தக் கோபத்தில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அதுவும் பொதுநலம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
கோபப்பட வேண்டிய இடத்தில் கண்டிப்பாக கோபப்பட வேண்டும். அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும். யாருக்கோ வந்தது நமக்கு எதற்கு வம்பு என்று கை கட்டி சும்மா இருத்தல் கூடாது.
"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.
என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அநீதிகளையும் குற்றங்களையும் கண்டு மனம் பொறுக்காது துணிவுடன் எதிர்த்துத் தட்டிக் கேட்கும் சமூக பொறுப்புணர்ச்சி ரௌத்திரம்.
இந்த ரௌத்திரம் அவரது பல பாடல்களில் வெளிக்காட்டியுள்ளார்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என கேட்கிறார்
விடுதலைக்காதல் என்ற தலைப்பில் கற்பு என்பது இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என கூறுகிறார் பாரதி
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பெண்கள் கற்போடு இருக்க வேண்டும் என கூறும் சமுதாயம், ஆணிடம் அவ்வாறு கூறுவதில்லை என இடித்துரைக்கிறார்
தனது பாஞ்சாலி சபதத்தில்,
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே'னென் றுரைத்தாள்.
தமிழ் மெல்ல சாகும் என மேலைநாட்டவர் கூறியதாக சினம் கொள்ளும் பாரதி,
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
என கொதித்தெழுதவர்
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான்
என்று கூறிவிட்டு,
- ஆ! இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என ரௌத்திரம் பழகினார்
சினம் அறிவற்றது, மாறாய் விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம். இன்னும் சரியாகச் சொன்னால், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம் கொள்ளாமல் கோழையாய் இல்லாமலிருப்பது ரௌத்திரம்.
ஆனால் உன்னை நீ அறிந்து உன்னை கட்டுக்குள் வைத்தால்தான் அது ரெளத்திரம்! கட்டவிழ்ந்தால் நீயும் வீழப்போகும் வெறும் சினம் கொண்ட மூடன்!
ஆகையாலே ரெளத்திரம் பழகு என்றார் பாரதியார்.

இவ்வாசகத்தை மேலோட்டமாக பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும். ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது 'பழகுதல்' என்ற சொல்லை, அது வலியுறுத்துவது, தெரிந்துகொள், பக்குவப்படு, தேர்ச்சிகொள் போன்ற அர்த்தங்களையாகும்.
உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரௌத்திரத்தை தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை அடைகிறான். ஏனெனில் ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது. அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம் அதேநேரம் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.
வசைசொற்களை பிரயோகம் செய்வதும் வன்முறையில் இறங்குவதும் அல்ல ரௌத்திரம். தனக்கு நேர்ந்த அவமானத்தில் விளைந்த தனது ரௌத்திரத்தை தனக்குள் அடைகாத்து மாபெரும் புரட்சி செய்தலே ரௌத்திரம்.
ரௌத்திரம் ஒருவகையில் நல்ல கோபமாம். அதனால்தான் அதைப் பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் பாரதி.
- சிந்தையில் சமூக அக்கறை இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்பது பாரதியின் விருப்பம்.
- பேருந்தில் பயணம் செய்யும் பெரியவருக்கு சில்லரைக்காசு கொடுக்க மறுக்கும் நடத்துநரைத் தட்டிக் கேட்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைத் தட்டிக் கேட்கும் துணிவு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
- மருந்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று கேட்கும் பாமரர்களுக்கு முறையாக பதில்சொல்லாமல் அலட்சியமாக இருக்கும் மருந்தாளுநர்களை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் வேண்டும்.
- சாலைவிதிகளைக் கடைபிடிக்காமல் விபத்தை உண்டாக்கும் நபரைத் தட்டிக் கேட்கும் தைரியம் வர வேண்டும்.
இவை எல்லாம் அன்றாடம் நம் கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகள். இன்னும் எத்தனை எத்தனையோ...நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் தட்டிக் கேட்க பழகுங்கள் என்பதற்காகத்தான் பாரதி "ரௌத்திரம் பழகு" என்கிறார்.
ரௌத்திரம் பழகாமல் இவ்வளவு நாளும் கோழைகளாக இருந்துவிட்டோமே என்று வருந்துகிறீர்களா.?
தப்பே இல்லை....காலம் என்ன ஓடியா போயிற்று? நம்பிக்கையை வளர்ப்போம். நாளைய தலைமுறையினருக்கு ரௌத்திரம் பழக பயிற்றுவிப்போம். தவறு நடப்பதைக் கண்டால் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை கற்றுத் தருவோம்.
ஆக மனிதம் மறக்காமல் வாழ.. முறையாய் ரௌத்திரம் பழகு
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu