இதுல கூட கலப்படமா? உப்பு, சர்க்கரையில் கலந்துள்ள பிளாஸ்டிக்கை கண்டுபிடிப்பது எப்படி?
Plastic adulteration in salt and sugar- உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் கலப்படம் ( கோப்பு படங்கள்)
Plastic adulteration in salt and sugar- நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
'மனித வாழ்வில் பிரிக்க முடியாதது எதுவோ?' என திருவிளையாடல் திரைப்படத்தின் தருமி பாணியில் கேட்டால், 'உப்பும் சர்க்கரையும்' என ஒரே வரியில் பதில் அளித்துவிடலாம்.
சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி, சராசரியாக ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும்.
நாளொன்றுக்கு 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொண்டால், ஒரு சராசரி இந்தியர் ஆண்டுக்கு 18 கிலோ சர்க்கரையை உட்கொள்வதாகப் பொருள்.
‘அதற்கேற்ப, மனித உடலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக' டாக்ஸிக் லிங்க் (Toxics Link) என்ற அரசுசாரா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது
புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், 'உப்பு, சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்' (Microplastics in Salt and Sugar) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் இருந்து, உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இந்நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மரக்காணம் உள்படப் பல பகுதிகளில் உப்பு, சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தினர் மேற்கொண்ட ஆய்வில், கடல் உப்பு, பாறை உப்பு, கல் உப்பு உள்பட 10 வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவில், உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 முதல் 0.5 மில்லிமீட்டர் வரை பல்வேறு வடிவங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உப்பு தொடர்பான ஆய்வில், 1 கிலோவுக்கு 6.71 முதல் 89.15 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 பிளாஸ்டிக் துகள்களும் சாதாரண கல் உப்பில் 6.7 என்ற அளவிலும் துகள்கள் இருந்ததாகக் கூறுகிறது.
சர்க்கரையைப் பொறுத்தவரை, ஒரு கிலோவுக்கு 11.85 முதல் 68.25 வரை மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடல் உப்பு, கிணற்று உப்பு (Borewell) ஆகியவற்றில் இருந்து தலா 7 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன.
மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில், உப்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கடைகளில் விற்கப்படும் உப்புகள் என தலா 6 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், பிளாஸ்டிக் நார்கள் (fibre) இருந்ததாக கட்டுரை தெரிவிக்கிறது.
'இந்த பிளாஸ்டிக் துகள்கள், மூன்று வழிகளில் மனித உடலுக்குள் செல்கிறது. ஒன்று, நேரடியாக உள்ளே செல்லுதல், மூச்சு இழுத்தல் மற்றும் நேரடியாகத் தோல் மூலம் செல்வது ஆகியவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்சில், நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், வயிற்றிலுள்ள குழந்தை, ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
"நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்து அறிவியல்ரீதியான தரவுகளில் பங்களிப்பைச் செலுத்தும் நோக்கிலும் உலகளவில் பிளாஸடிக் பயன்பாடு குறித்த பிரச்னையைத் துல்லியமாக அணுகுவதற்கும் உதவுவதே இந்த ஆய்வின் நோக்கம்" என்கிறார், 'டாக்ஸிக் லிங்க்' நிறுவனத்தின் இயக்குநர் ரவி அகர்வால்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu