நிறைவான மண வாழ்க்கைக்கு நிதி பற்றிய ஆலோசனைகள்
திருமணம் என்பது எந்தளவு மகிழ்ச்சியானதும் அழகானதுமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பிரச்னைகளும் உள்ளது என்பது மறுக்க முடியாதது. சிக்கல்கள் நிறைந்த திருமண வாழ்க்கையை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாகக் கொண்டு செல்ல சரியான புரிதல் எந்தளவு அவசியமோ, அதே அளவு நிதி சார்ந்த அம்சங்களும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீ பக்கத்துல இருந்தாலே போதும்! வேறு தேவையில்லை என்ற டயலாக் சினிமாவுக்கு பொருந்தலாம், வாழ்க்கைக்கு பொருந்தாது. நிதி மேலாண்மை குறித்து இருவரும் ஆலோசிப்பதே சரியான மணவாழ்விற்கு வழிவகுக்கும்.
தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் திருமணத்துக்கு முன் கட்டாயம் கவனத்தில்கொள்ள வேண்டிய நிதி சார்ந்த சில விஷயங்கள் குறித்து ஒரு தெளிவு தேவையாகிறது.
குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் அடிப்படை விஷயமே எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு செலவு செய்கிறோம் என்பாது தான் முக்கியம். ஒருவருடைய செலவுகளைப் பொறுத்துதான் அவரின் நிதி எதிர்காலம் என்பது இருக்கும். நம் தகுதிக்கு மீறி நாம் எதையும் செய்யக் கூடாது
நாம் பின்பற்ற வேண்டிய நிதிப் பாடங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேசுங்கள்
திருமணம் செய்து கொள்ளப்போகிற செய்ய வேண்டிய விஷயம், மனம்திறந்து தங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வது மட்டுமல்ல, அவர்களுடைய நிதி மேலாண்மை குறித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக பணத்தைக் கையாளும் முறை, செலவு, வருமானம், கடன் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியும் திறந்த மனதுடன் உரையாட வேண்டும். இதுவரை எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம், இனி எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெளிவாகப் பேசிவிட வேண்டும்.
ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவராக இருந்தால், அதனை குறை கூறாமல், சண்டை போடாமல், இன்னொருவர் அவருக்கு அதைப் புரிய வைக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
நம்முடைய நிதிநிலையைப் பொறுத்துதான் நம்முடைய செலவுகள் இருக்க வேண்டுமே தவிர, பிற காரணிகள் செலுத்தும் ஆதிக்கத்தால் இருக்கக் கூடாது. நம் செலவுகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். செலவு செய்யும்முன் இரண்டு மூன்று முறை யோசியுங்கள்.
திருமணச் செலவுகள்
நம் நாட்டில் கடன் வாங்கியாவது விமரிசையாகத் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் பலருக்கு திருமணத்துக்காகப் பெரிதாக செலவு செய்ய விருப்பம் இல்லை. அவர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பல செலவுகளைத் தவிர்த்து அந்தப் பணத்தை புத்திசாலித்தனமாக சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஆரம்பிக்கிறார்கள்.
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் தம்பதிகளின் நிதி எதிர்காலம் திருமணத்தின் முதல் நாளிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கலாம். ஒருமுறை தானே திருமணம் என்று செலவு அதிகம் செய்துவிட்டு, அதற்காக வருத்தப்படும் பலர் உள்ளனர். எனவே, திருமணத்தில் அவசியமான செலவுகளை மட்டும் செய்வது எல்லா வகையிலும் பலன் தரும்.
ஜாயின்ட் அக்கவுன்ட் கட்டாயம்
திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் தனித்தனியாக சேமிப்புக் கணக்குகள் இருந்தாலும் இருவருக்கும் ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஜாயின்ட் அக்கவுன்டில் மாதாந்தரச் செலவுக்கென ஒரு தொகையை வைத்துக்கொண்டு அந்தக் கணக்கிலிருந்து மட்டுமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் உணவு, மின் கட்டணம், பெட்ரோல் உள்ளிட்ட செலவுகளை இந்தக் கணக்கிலிருந்து செலவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், நாம் குடும்ப செலவுக்கு எவ்வளவு செலவாகிறது என தெரியவரும்,
குடும்ப செலவு போக மீதமுள்ள தங்களுடைய தனிப்பட்ட செலவுகள், தாய் தந்தை, உடன்பிறந்தவர்களுக்கான செலவுகளை மேற்கொள்ளும் சுதந்திரத்துடன் இருக்கலாம்.
உறவினர்கள், நண்பர்களுக்கான செலவுகள்
திருமணத்துக்கு முன்பு வரை உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கணிசமான செலவுகளை மேற்கொண்டு வந்திருப்போம். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் அப்படி இருக்க முடியாது. குடும்பம் என்றாகிவிட்ட பிறகு, முன்னுரிமை குடும்பத்துக்குத்தான்.
குடும்ப வளர்ச்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில அவசியமற்ற செலவுகளை நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தேவையில்லாமல் நண்பர்களை அழைத்துக்கொண்டு பார்ட்டி, சினிமா, ஊர் சுற்றுவது என்று செலவுகளை மேற்கொள்வது எப்போதாவது மட்டும் இருக்கலாம். அடிக்கடி எனில், அது உங்களுடைய நிதிநிலையை பாதிக்கும்.
பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களின் அன்றாடச் செலவுகளுக்கோ, படிப்புக்கோ பணஉதவி செய்து வந்தால் அதைத் தவிர்க்க முடியாது. உறவினர்களுக்கு உண்மையிலேயே பண உதவி தேவை எனில், அதைப் பெருந்தன்மையுடன் செய்யுங்கள். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. நல்லவர் என்று பெயர் எடுப்பதற்காகவோ நீங்கள் பணத்தைச் செலவு செய்பவராக இருந்தால் அதை உடனே நிறுத்துவது நல்லது.
இதனால் சில மனக்கஷ்டங்கள் ஏற்படலாம் என்றாலும், பிற்பாடு பெரிய அளவில் மனக்கசப்புகள் ஏற்பட்டு, உறவு விரிசல் அடையாமல் இருக்க இது நிச்சயம் உதவும்.
கடன்
கடனில் நல்ல கடன், கெட்ட கடன் என்று இரண்டு வகை உண்டு. கடன் வாங்கி, நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சொத்து, அடுத்து வரும் காலத்தில் மதிப்பு உயரும் வகையில் இருந்தால், அதை நல்ல கடன் என்று சொல்லலாம். அதற்கு நல்ல உதாரணம், வீடு வாங்குவது.
நமக்கே நமக்கென ஒரு வீடு வாங்க நினைப்பதில் தவறில்லை. அதற்காக எவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். வீட்டுக் கடன் வாங்குவதாக இருந்தால் முதலில் டவுன் பேமென்டாகக் கணிசமான பணத்தைத் தயார் செய்துவிட்டு பின்னர், கடன் வாங்கச் செல்லுங்கள். வீட்டுக் கடனுக்காக நீங்கள் வாங்கும் கடனின் மாத தவணை உங்களுடைய மாத வருமானத்தில் 50 சதவிகிதத்துக் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அதே போல்அல்லது கடன் மூலம் வாங்கும் பொருள்மூலம் ஏதேனும் வருமானம் வந்தாலும் அதை நல்ல கடன் என்றே சொல்லலாம். வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதாக இருந்தால், கார் வாங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கியிருக்கிறார் என வாங்கினால், அது உங்கள் நிதி நிலையை பாதிக்கும்.
திடீர் பண உதவி
உதவி கேட்டு வருகிறவர்களில் உண்மையானவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள். அவசர உதவி என்று கேட்டுவிட்டு, பணம் வாங்கிச் செல்பவர்களில் பலர், பிற்பாடு அந்தப் பணத்தைத் திரும்பத் தருவதே இல்லை. அதற்காக அவர்களிடம் பலமுறை கேட்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, திரும்பி வராத நிலையில் இருக்கும் பண உதவிகளை முடிந்தவரை செய்யாமல் விட்டுவிடுவதே நல்லது.. இதற்காகக் கடன் கேட்டு வந்தவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலைப்படாதீர்கள்.
பொறுப்பு பகிர்வு, ஆதரவும்
குடும்பப் பொறுப்பையும் பாரத்தையும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். கடன் இருந்தால் இருவரும் அதை அடைப்பதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குடும்பத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லலாம்.
கொரோனா போன்ற நெருக்கடி சமயங்களில் வேலை இழப்பு, வருமானம் குறைப்பு போன்ற சவால்களை எல்லாம் பார்த்தோம். அதுபோன்ற சமயத்தில் ஒருவர் இன்னொருவருக்கு ஆதரவாக பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவர் இன்னொருவருடைய நிலைமையைப் புரிந்து அவருடைய வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுவது மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவும். ஒருவர் இன்னொருவருடைய சுதந்திரத்துக்கு இடமளித்தாலும், குடும்ப வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பதில் தவறில்லை.
சொத்துகள் வாங்கும்போது
வீடு போன்ற சொத்துகள் வாங்கும்போதும், முதலீடு என்று வரும்போதும் பெரும்பாலும் ஆண்களே தீர்மானிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, சொத்துகள் வாங்கும்போது, முதலீடுகளைத் திட்டமிடும்போது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. ரகசியமாக எதையும் வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி இருந்தால் அதுவே உறவில் விரிசலைக் கொண்டு வந்துவிடும்.
அதேபோல், அன்பின் காரணமாக மனைவியின் பேரிலேயே சொத்து வாங்கி அதனால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. நிதி எதிர்காலம் என்ற விஷயத்தில் எந்தவித உணர்வு ரீதியிலான முடிவுக்கும் இடம்கொடுக்காதீர்கள். சொத்து வாங்குவதில் இருவருடைய பங்கும் இருக்கும்பட்சத்தில், எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ, அந்தளவுக்கு பங்கு உரிமை உண்டு என்று தெளிவாகக் குறிப்பிட்டு சொத்து பத்திரங்களைப் பதிவு செய்யுங்கள். இதனால் ஏதேனும் எதிர்பாராத விதமாகப் பிரிய வேண்டிவந்தால் திருமணத்தால் எல்லாத்தையும் இழந்துவிட்டேன் என்று புலம்ப வேண்டிய தேவை இருவருக்கும் இருக்காது.
குழந்தை
குழந்தை பெற்று, அதை வளர்த்து ஆளாக்குவது என்பது இன்றைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இன்று எல்லாமே தனிக் குடும்பங்களாகிவிட்ட சூழலில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது யார் என்ற பிரச்னை அதிகரித்துள்ளது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், குழந்தையை யார் வளர்ப்பது என்பதைப் பேசி முடிவுசெய்துவிட்டு, குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது.
திருமணத்துக்கு முன்பு கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது நிறைய பணம் வருமானமாக வரும். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாகிவிட்டால், பெண் வேலையை விட நேர்வதால், வருமானம் திடீரென நின்றுவிடும். ஒரே வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலையில், குழந்தை வளர்ப்புக்கான செலவையும் செய்யும் போது சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, அதனால் நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாகும்.
குழந்தை விஷயத்தில் உங்களுடைய சூழல், நிதி நிலை இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு எதற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவசியம். குழந்தை விஷயத்தில், இயல்பாக கருத்தரித்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் காத்திருங்கள். உறவினர்கள், நண்பர்கள், சமூகம் சொல்லும் எதற்கும் காது கொடுக்காதீர்கள்.
அதேபோல், குழந்தையைக் கவனித்துக்கொள்ள என்ன ஏற்பாடு என்று திட்டமிடுங்கள். வேலையை விடாமல் பேறுகால விடுமுறையை எடுத்துக்கொண்டு குழந்தையைப் பார்த்துக்கொள்ள என்னவெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்று பாருங்கள்.
சேமிப்பும் முதலீடும்
எதுவும், எப்போதும் நடக்கலாம் என்ற வகையிலான வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நடக்கும், நடக்காது என்று உறுதியாக எதுவும் நம்மால் சொல்ல முடியாது. எனவே, விபத்து, உயிரிழப்பு, வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்ற எதுவும் நடக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
திருமணமானதும் முதலில் கணிசமான தொகையை அவசர காலத் தேவைக்காக சேமிக்க ஆரம்பியுங்கள். இளம்வயதிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. பிரீமியம் மிகக் குறைவாகவும் கவரேஜ் அதிகமாகவும் கிடைக்கும். அடுத்து, மருத்துவ செலவுகளைச் சமாளிக்க ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் இன்னொரு பலனும் உண்டு. வரி செலுத்துபவராக இருந்தால், வரிச் சலுகைக்காக இவற்றைக் கணக்கில் காட்டலாம். இவை தவிர, உபரியாகப் பணம் இருந்தால், அவற்றை முதலீடு செய்யலாம். கணிசமான தொகையை மியூச்சுவல் ஃபண்டிலும், குறிப்பிட்ட அளவில் தங்கத்திலும் சேமிக்கலாம்
ஏற்கெனவே பல தம்பதியினர் அழகாகத் திட்டமிட்டு தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். சில தம்பதியினர் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல், நிதிப் பற்றாக்குறையிலும் கடன் சுமையிலும் தவிக்கிறார்கள். இந்த இரண்டில் நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள்?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu