இயற்கை அளித்த வரம்- பனை மரம் ; பனைமரங்களின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பனை மரங்கள் தரும் நன்மைகள் ஏராளம். அதில் உடல் ஆரோக்கிய பொருட்கள் நிறைந்திருக்கின்றன.
தமிழர்களின் அடையாளம் மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம். தமிழர்களின் அடையாளம் பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் இதன் பயன்களும் மருத்துவ குணங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமாக உள்ள பனை மரம் தமிழகத்தின் மாநில மரமாகவும் விளங்கி வருகிறது. இயற்கையில் தானாகவே வளர்ந்து நிலத்தடி நீர்இருப்பை தக்க வைப்பதுடன் மண்ணரிப்பைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.
இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளில் இருந்து பலன் தரத்தொடங்கும். இந்த மரம் 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளர்ந்து 3 தலைமுறைகளுக்கு பலன் தரக்கூடியது. இதன் ஓலைகள் 2 முதல் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. பசுமை ஓலை சாரோலை என்றும் காய்ந்த ஓலை காவோலை என்றும் அழைக்கப்படுகிறது. நமது மண், இலக்கியம், கலாசாரம், சமயம், வணிகம், உணவு, வரலாறு மற்றும் திருக்குறளில் இடம் பிடித்த ஒரே மரம் பனைமரம். சித்தர்களின் மருத்துவ குறிப்புகளில் இதன் பயன்பாடுகள் விரிவாக கூறப்பட்டுள்ளது.
பனைமரம் உணவு மற்றும் உணவற்ற பொருட்களை நமக்கு கொடுக்கிறது. உணவுப் பொருட்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு பொருட்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், மரம், மரப்பொருட்கள் ஆகியவை பனையில் இருந்து பெறப்படும் உணவற்ற பொருட்களாகும்.
ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகளை அளிக்கும் தன்மையுடையது. மேலும் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதன்படி ஓராண்டில் ரூ.6 ஆயிரம் வரையிலும் வருமானம் ஈட்ட முடியும்.
அடி முதல் நுனி வரை மனிதனுக்கு பயன்படுவது போல் ஓணான், பாம்பு, பல்லி, வவ்வால், குருவி, அணில், பச்சைக்கிளி, மரங்கொத்தி, மைனா, தூக்கணாங்குருவி உள்ளிட்ட எண்ணற்ற உயிரினங்களுக்கும் பனைமரம் அடைக்கலம் கொடுத்து உதவி வருகிறது. தாளிப்பனை என்ற பனை ஓலையில் இருந்து ஓலைச்சுவடி தயாரிக்கப்படுகிறது. முறையாக எடுத்து பக்குவப்படுத்தப்பட்ட பனையோலையை 400 ஆண்டுகள் வரையிலும் பயன்படுத்தலாம். இதனால் தான் புலவர்கள், சித்தர்கள் பாடல்கள் மற்றும் மருத்துவ குறிப்புகளை எழுதுவதற்கு பனை ஓலையை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிகளவு வேலை வாய்ப்பினைக் கொண்டதும் குடும்பம் குடும்பமாக முழுநேரமாக ஈடுபட்டு வந்த இந்த தொழில் போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தையிடுதல் முடியாமை, குறைவான வருமானம் உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்து வருகிறது.
நீர்நிலைகள், சாலை ஓரங்களில் கம்பீரத்துடன் காட்சியளித்த பனைமரங்கள் சாலை விரிவாக்கம், நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டதால் அதன் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அதன் பிறகு நடவு செய்வதற்கும், உள்ள மரங்களை பராமரிப்பதற்கோ முன்வரவில்லை. உடலுக்கு இயற்கை முறையில் சத்துக்களை அளித்து குளிர்ச்சி தருவதுடன், வெப்பத்தையும் தனித்து துவர்ப்பு, இனிப்பு கலந்த சுவையான உணவை அளிக்கக்கூடிய பனைமரத்தை அதிக அளவில் நடவு செய்து நமது மாநிலத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி பனையேற்ற தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கி பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிவதுடன் அதை சந்தைப்படுத்தலுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அவர்களின் வருமானமும், வாழ்வாதாரமும் உயரும். பனை மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் பயனாக மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர் இருப்பை சேமிக்கவும் உயர்த்தவும் முடியும்.
ஒரு பனைமரம் ஏராளமான தண்ணீரை தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டது. பனைமரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுவதுடன், அதன் ஓலையில் பல வகையான பொருட்கள் கிடைக்கிறது. நுங்கு கோடை வெப்பத்தை தடுத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. பனம் பழத்தில் இருந்து சாறு எடுத்து பருகினால் பல்வேறு நோய்களை நீக்குகிறது. மேலும் பல பல்வேறு சத்துக்களை கொண்ட பனங்கிழங்கு சர்க்கரை வியாதியை பரம்பரைக்கு நெருங்க விடாமல் தடுக்கிறது.
பதநீர், பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி போன்றவை கோடை காலத்தில் வருகின்ற அம்மை நோயால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தென்னையை போன்று பனை மரத்தில் இருந்தும் நீரா இறக்கலாம். அரசு தனி கவனம் செலுத்தி தமிழர்களின் அடையாளமான பனையை காப்பாற்ற வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் வியாதிகளையும் குறைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் வந்தால் தான் இன்றைக்கு ரேஷன் கடையில் பனை சார்ந்த பொருட்களை அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல தலைமுறைகளுக்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய பனைமரம் புயல், சுனாமி என அதிக அளவு காற்று வந்தால் கூட சேதம் அடையாமல் தாங்கி நிற்கும் வலு உடையது. இந்த பகுதியில் 120 முதல் 140 அடி வரை வளர்ந்து உள்ள பனைமரத்தில் விதைப்புக்கான காய்களை எடுக்கலாம். அந்த விதையை போடும் போது கொட்டை மேலே நோக்கி வெளிப்புறமாக நடவு செய்தால் பலனுக்கு வரும் போது ஆண் மரமாக வருகிறது.
அதே நேரத்தில் பனை விதையை உள்நோக்கி கீழ்புறமாக நடவு செய்தால் அவை அனைத்தும் பெண் மரமாகவே வளர்ந்து நிலைத்து நின்று பலன் அளிக்கும். இதனை நாங்கள் முறைப்படி நடவு செய்து கண்டுபிடித்து உள்ளோம். பல்வேறு சிறப்புகள், பெருமைகள் பாரம்பரியமிக்க பனை மரங்களை அதிக அளவில் நடவு செய்து அழிவின் விளிம்பில் உள்ள அதனை காப்பாற்ற வேண்டும். மேலும் இன்றைய தலைமுறையினருக்கும் பனையின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து, அதனை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu