உடலை சீராக வைத்திருக்கும் 'சீரகம்'

உடலை சீராக வைத்திருக்கும் சீரகம்
X
சீரகத்தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இன்றையச் சூழலில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பராம்பரிய முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காளமேகப்புலவர் பாடிய சிலேடைப்பாடலில், மங்காத சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் என கூறியிருப்பார். அனைவரின் வீட்டு சமையலில் நிச்சயம் இருக்கக்கூடிய உணவுப்பொருள்களின் ஒன்றான சீரகம், உடல் எடையைக்குறைப்பதற்கு, இரத்த அழுத்தத்தைச் சீராக்க என பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்டுள்ளது.

சீரகம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அதனுள் கொண்டுள்ளதாக ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சீரகத்தில் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது? எப்படி இதனை அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்

மக்கள் சீரகத்தை அப்படியே சாப்பிடுவது என்பதில்லாமல் சீரகத்தண்ணீரைத்தான் உடல் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. சீரக தண்ணீரை தினமும் குடித்து வந்தால், இருதயத்தில் தங்கி இருக்கும் சளியை அகற்றுவதோடு, நம்மை சீராக சுவாசிக்கவும் உதவுகிறது. இது சளியையும் குணப்படுத்தும் தன்மையுடையது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடைக்குறைப்பு: உடல் எடைக்குறைக்க விரும்பும் பெரும்பாலோனார் சீரகத்தண்ணீரைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் கலோரிகள் மிகக்குறைந்த அளவே உள்ளது. மேலும் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகளவில் இருப்பதால் உடல் எடைக்குறைப்புக்கு உதவியாக இருக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கிறது.

செரிமானம்: சீரகத்தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் போது செரிமான நன்றாக இருக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நல்லத் தீர்வு. இதோடு அடிக்கடி வயிற்றுக்கோளாறு பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் சாதாரண தண்ணீருக்கு பதிலாக, இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீரை அருந்தலாம். இதோடு குமட்டல் இருந்தாலும் சீரகத்தண்ணீரை பருகலாம்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்: சீரகத்தண்ணீரில் புற்றுநோய் எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் பரவாது என்றும் கூறப்படுகிறது.

முகப்பொலிவு: சருமம் மென்மையாக மற்றும் மிருதுவாவதற்கும் சீரகத்தண்ணீர் பருகுவது அவசியம். இதில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் எப்போதும் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இதில் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு, முடி வளர்வதற்கும், முடி உதிர்தலையும் தடுப்பதற்கு உதவியாக உள்ளது.

சீரகத் தண்ணீரில் பல வகை நன்மைகள் இருந்தாலும் அதிகப்படியாக உபயோகிக்கும் போது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே! குறிப்பாக சீரக தண்ணீரின் அளவு அதிகமாகும் போது நெஞ்செரிச்சல், இரத்த சர்க்கரையின் அளவை கடுமையாக குறைக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!