கொழுக்கு மலைக்கு ஒரு நாள் டூர் போகலாமா?
Kolukkumalai tourist attractions- பார்க்க, ரசிக்க கொழுக்குமலைக்கு ஒருமுறை சென்று வாருங்கள்! ( கோப்பு படம்)
Kolukkumalai tourist attractions- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிறிய மலைக்கிராமமான கொழுக்குமலையில் 81 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கிறது. இத்தேயிலைத் தோட்டத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களும் கேரள மாநிலப் பகுதிகளாகவும், இந்தத் தேயிலைத் தோட்டம் மட்டும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டக்குடி ஊராட்சிப் பகுதியுடன் இணைந்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போடிநாயக்கனூரைச் சேர்ந்த செட்டியார் சகோதரர்கள் என்பவர்களை உதவியாளர்களாகக் கொண்டு 1920 முதல் 1927 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆங்கிலேயர்களால் இந்தத் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. 1927 முதல் 1932 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் தேயிலைச் செடிகள் நடவு செய்யப்பட்டன. தேயிலைத் தோட்டத் தொழில் பணிகள் 1936 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இங்கிருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குதிரை வண்டிகளைக் கொண்டும் மற்றும் தலைச் சுமையைப் பயன்படுத்தியும் கொண்டு செல்லப்பட்டக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டன.
இத்தேயிலை நிறுவனம் 1935 முதல் 1971 ஆம் ஆண்டு வரை 'வலது எச்சரிக்கைத் திட்டம்' என்ற ஒப்பந்தத்தின் கீழ் செட்டியார் சகோதரர்களிடம் இருந்தது. அதன் பிறகு, செட்டியார் சகோதரர்கள் 1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் நாளில் சிவகாசி, ஏ.ஜே. குழுமத்திற்குத் தங்கள் உரிமைகளை மாற்றிக் கொடுத்தனர். அதன் பிறகு, 1971 ஆம் ஆண்டு முதல் சிவகாசி ஏ.ஜே. குழுமத்தினரால் இத்தேயிலை நிறுவனம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்தேயிலை நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்களிலான உரம் என்று எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இத்தேயிலைத் தோட்டத்தில் மரபு வழிமுறைகளைப் பின்பற்றியேத் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மலையுச்சியில் மிக உயரமான இடத்தில் இத்தோட்டம் அமைந்திருப்பதால், இங்கு தேயிலைச் செடிகள் மிக மெதுவாகவே வளர்கின்றன. அதிகமான உயரத்தில் வளரும் தேயிலை என்பதால் இத்தேயிலையின் தரமும் உயர்வாகவே இருக்கிறது. உலகில் மரபு வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் சில தேயிலைத் தோட்டங்களில், இத்தேயிலைத் தோட்டமும் ஒன்றாக இருக்கிறது. தூய்மையான, ஆற்றல் தரும் மாசு இல்லாத காற்றில் வளரும் இத்தேயிலையின் சுவை தனித்தன்மை கொண்டது. உலகின் மிக உயரமான இடத்தில் உற்பத்தி செய்யப்படும் இத்தேயிலை சுவை, தரம் மற்றும் உடல் நலம் என்று அனைத்திலும் 100% என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இத்தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் பொதுவான கரும்பறவைகள், கருஞ்சாம்பல் வாலாட்டிகள், மலபார் பாடும் வகைக் குருவிகள், மலை மைனாக்கள், கிழக்கத்திய வெள்ளைக்கண் குருவிகள், கொண்டலாத்திகள் போன்ற பறவைகளும், நீலகிரிக் கருங்குரங்கு, இந்திய இராட்சத அணில்கள், நீலகிரி வரையாடு போன்ற விலங்குகளும் இருக்கின்றன.
கொழுக்கு மலை தேனியிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரள மாநிலம் மூணாறு எனும் ஊரிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது. தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலப் பகுதியில் அமைந்திருக்கும் சூரியநெல்லி எனும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொழுக்குமலைக்கு ஜீப்களின் மூலமாகச் செல்ல வேண்டும். ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவிற்கு ஜீப்களில் 2500 முதல் 3000 ரூபாய் வரை கட்டணமாகப் பெறப்படுகிறது.
கொழுக்கு மலையின் இயற்கையான அழகைக் காண்பதற்கு முன்பாக, அதிகாலையில் தோன்றும் சூரிய உதயத்தைக் காண்பதற்காகவேப் பலரும் அங்கு செல்ல இரவு வேளையிலேயேப் பயணிக்கின்றனர். கொழுக்கு மலை உச்சியில் வெண்மையான மேகக் கூட்டங்களுக்கிடையே, எழுந்து வரும் சூரியனின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மலைப்பகுதியிலிருந்து பார்க்கும் போது, வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்.
கிழக்கு அடிவானத்தில் உள்ள மலைகளில் முதல் சூரியக் கதிர்கள் கசியும் போது, வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறும். சூரியன் மெதுவாக எழுந்து மேலேச் செல்லும் போது, தொலைவில் உள்ள அழகிய மலைகள் இயற்கையின் போர்வையிலிருந்து வெளியேறி, சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும். இம்மலையில் சூரிய உதயத்தைக் காண பல இடங்களிருப்பினும், இங்குள்ள புலி முகம் முகம் கொண்ட 'புலிப்பாறை' எனுமிடத்தின் பின்னால் நின்று பார்த்தால், புலியின் வாயிலிருந்து சூரியக் கதிர்கள் வெளி வருவது போன்று தோன்றும்.
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்தக் கொழுக்கு மலையைப் பூமியின் சொர்க்கம் என்றேச் சொல்லலாம். மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குரங்கணி, மூணாறு, டாப் ஸ்டேசன் போடிமெட்டு எனும் ஊர்களைக் கொழுக்கு மலையிலிருந்து பார்க்கும் போது மிக மிக அழகாக இருக்கும்.
அதிகாலையில் தோன்றும் சூரியனைக் காண இரவு வேளையில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது பலரும் அங்குள்ள கூடார முகாம்களிலும், வெளியிலும் காத்துக் கிடப்பதைக் காணலாம். இதே போன்று, இங்கு சூரியன் மறைவையும் காண முடியும். கடற்கரைகளில் நின்று சூரியன் தோற்றம் மறைவைக் கண்டு ரசித்தவர்களுக்கு, மலையுச்சியிலிருந்து சூரியன் தோற்றம், மறைவைக் காண்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
கொழுக்கு மலைத் தேயிலை நிறுவனத்தின் மூலம் கொழுக்கு மலையில் நடைப்பயணம் மற்றும் மலையேற்றம், தொழிற்சாலை பார்வையிடல், உணவு போன்றவைகளுக்காக ஒரு நபருக்கு ரூ.2500/- கட்டணம் பெறுகிறது. மலையேற்றத்திற்குச் சரியான உடற் தகுதியுடையவர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவர். இவையனைத்தும் பருவக்கால நிலைகளுக்குக் கட்டுப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேயிலை நிறுவனம் இங்கு தங்குவதற்கு வசதியுடைய அறைகள், கூடார முகாம், போன்றவைகளை உரிய கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு தருகிறது. மிகச்சிறப்பான சுற்றுலா அனுபவத்தைப் பெற்றிட, கொழுக்குமலைக்கு ஒரு முறை பயணம் செய்யலாம். வானத்தைத் தொட்டு விட்டுத் திரும்பலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu