உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் குறிந்து தெரிஞ்சுக்குங்க...

உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் குறிந்து தெரிஞ்சுக்குங்க...
X

உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் குறிந்து தெரிந்துக் கொள்வது முக்கியம் (கோப்பு படம்)

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (FSSAI) இயங்கி வருகிறது. உணவில் கலப்படம், உணவு தரம் குறைதல் போன்றவற்றை தவிர்க்க பல்வேறு விதிமுறைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. ஏதேனும் ஒரு உணவு வணிகர் தவறு செய்தால் அவரது தவறுகளைத் திருத்த போதிய வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனில், உணவு பாதுகாப்புத் துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

ஆனால், பெரும்பாலான நுகர்வோர்கள் புகார் அளித்தவுடன் கடையை மூட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், சட்டம் வரையறுத்துள்ள வழிமுறைகளின் படியே துறை இயங்க முடியும். அதன்படி, ஒரு குறிப்பிட்ட சட்ட நடவடிக்கையை, துறை மட்டுமில்லாது, நுகர்வோரும் எடுக்கலாம் என்பதுதான் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-இன் சிறப்பு அம்சமாகும்.

அந்தச் சட்டத்தில் உள்ள நுகர்வோர் உரிமை குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் பிரிவு 40-இன் கீழ் நுகர்வோரும் உணவு மாதிரியை விலை கொடுத்து வாங்கி, உணவு பகுப்பாய்விற்கு அனுப்பலாம். அந்த வகையில் நுகர்வோரும் ஒரு பகுதி நேர உணவு பாதுகாப்பு அலுவலரே. இதுகுறித்த விவரங்களை https://fssai.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உணவு மாதிரியைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவையான கட்டணத்தை, வங்கி வரைவோலையாக எடுத்து, ஒரு பகுதி உணவு மாதிரியுடன் அரசு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும். மீதம் உள்ள மற்றொரு பகுதி உணவு மாதிரியை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். பகுப்பாய்விற்க்கு அனுப்பப்பட்ட உணவு மாதிரி ‘தரமானது’ என்று அறியப்பட்டால், நுகர்வோர் செலுத்திய கட்டணம் திரும்பி வழங்கப்படமாட்டாது.

ஒருவேளை, நுகர்வோர் அனுப்பிய உணவு மாதிரி ‘தரம் குறைவானதாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ’ அறியப்பட்டால், அவர்கள் செலுத்திய பகுப்பாய்வுக் கட்டணம் மட்டும் திரும்ப வழங்கப்படும். மேலும், அது சம்பந்தமான வழக்கினை உணவு பாதுகாப்புத் துறை தொடர்ந்து நடத்தும். அது மட்டுமல்லாது, ஏதாவதொரு வணிகரிடத்தில் வாங்கிய உணவைச் சாப்பிட்டு, உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, அது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டால், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 65-இன் கீழ் இழப்பீட்டையும் நுகர்வோர்கள் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நுகர்வோர் குறைதீர் ஏற்பாடு: தமிழ்நாடு அரசு சமீபத்தில், உணவு பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் நுகர்வோர்கள் புகார் அளிக்க ஏதுவாக https://foodsafety.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் TN Food Safety Consumer App என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே உள்ள வாட்ஸ் அப் புகார் எண்ணும் (9444042322) தொடர்கின்றது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture